பிபின் ராவத்துக்கு எதிராக கருத்து பதிவிட்ட விஷமிகள் மீது சட்ட நடவடிக்கை - பசவராஜ் பொம்மை உத்தரவு
மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்துக்கு எதிராக கருத்து பதிவிட்ட விஷமிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
பெங்களூரு:
சில விஷமிகள்
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தனது சொந்த தொகுதியான ஹாவேரி மாவட்டம் சிக்காவியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு கர்நாடகத்தில் மோசமான எண்ணம் கொண்ட சில விஷமிகள் கொண்டாடியுள்ளனர். மேலும் அவரது மறைவுக்கு மகிழ்ச்சி தெரிவித்து சமூக வலைத்தளத்தில் விஷமிகள் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். அத்தகையவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டுள்ளேன்.
மக்களின் பிரச்சினைகள்
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய ராணுவத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்தியவருக்கு எதிராக இத்தகைய கருத்துகளை வெளியிடுபவர்களை ஒவ்வொரு இந்தியரும் கண்டிக்க வேண்டும். இத்தகைய வக்கிரமான எண்ணங்களை பொறுத்துக்கொள்ள முடியாது. அத்தகையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். பிபின் ராவத்துக்கு எதிராக கருத்துகளை வெளியிட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள்.
ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயம் அடைந்து பெங்களூரு கமாண்டோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் குரூப் கேப்டன் வருண்சிங்கை நேரில் பார்த்தேன். அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் விரைந்து குணமடைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன். பெலகாவியில் நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் சட்டம்-ஒழுங்கு, மக்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும். எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைகளுக்கு பதிலளிக்க நாங்கள் தயாராக உள்ளோம்.
முன்எச்சரிக்கை நடவடிக்கைகள்
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவியுள்ளது. இதையொட்டி மாநிலத்தில் அதை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதற்கான மருந்துகள், தடுப்பூசிகள் கையிருப்பு வைக்கப்பட்டு உள்ளன.
குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு வழிகாட்டுதலை வெளியிடும். அதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.