‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2021-12-10 22:50 GMT
குரங்குகள் தொல்லை

சேலம் மாவட்டம் தாத்தையங்கார்பட்டி செங்கரடு கிராமத்தில் குரங்குகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குரங்குகள் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இந்த குரங்கள் வீட்டுக்குள் புகுந்து உள்ளிருக்கும் பொருட்களை நாசம் செய்கிறது. அவைகளை விரட்டினால் கடிக்க வருகிறது. பள்ளிக்கு செல்லும் மாணவர்களை பயமுறுத்துகிறது. இதனாலேயே பாதி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல அச்சப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து இந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும்.
-ரவிக்குமார், செங்கரடு, சேலம்.
===
குவிந்து கிடக்கும் குப்பைகள் 

சேலம் அம்மாபேட்டை பலபட்டறை மாரியம்மன் கோவில் பின்பகுதி அம்மன் கோவில் தெருவில் அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். மேலும்  குப்பைகள் அள்ளாததால் அந்த பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்கின்றனர். இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குவிந்து கிடக்கும் குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மோகன் ராஜ், அம்மாபேட்டை, சேலம்.

தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி டி.ஏ.எம்.எஸ். காலனி எதிரில் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கின்றன. தினசரி குப்பை அள்ளுபவர்கள் வராததால் ஒரு மாதமாக அந்த பகுதியில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. அங்கு குப்பைத்தொட்டியும் இல்லை. துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நோய் பரவும் அபாயம் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குவிந்துள்ள குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், இலக்கியம்பட்டி, தர்மபுரி.
=====
குண்டும், குழியுமான சாலை

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் முதல் அரூர் செல்லும் சாலை குண்டும், குழியுமாக பழுதடைந்து உள்ளது. பல வருடங்களாக இந்த சாலை இதே நிலையில் தான் உள்ளது. மருத்துவ அவசரம் போன்ற காலங்களில் இந்த சாலையில் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. இது பற்றி மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை. எனவே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், அயோத்தியாப்பட்டணம், சேலம்.
===
சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீர் 

சேலம் நெய்க்காரப்பட்டி அருகே புதூர் ரெயில்வே பாலம் வழியாகத்தான் பல்வேறு ஊர் பொதுமக்கள் செல்கின்றனர். மழைக்காலங்களில் இந்த சுரங்க பாலத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதுபற்றி புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை அகற்ற வேண்டும்.
-ஊர்மக்கள், நெய்க்காரப்பட்டி, சேலம்.
===
சேலம்-ஏற்காடு சாலையில் கோரிமேட்டில் இருந்து சின்ன கொல்லப்பட்டி வரை உள்ள சாலையின் இரு பக்கங்களிலும் மழைநீருடன், சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. தற்போது தான் இந்த பகுதியில் புதிதாக சாலை போடப்பட்டது. ஆங்காங்கே சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் சாலை சேதமடைந்து பள்ளம் பள்ளமாக காட்சி அளிக்கிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனர். இதனை அதிகாரிகள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வ.மஹமூத், சின்னகொல்லப்பட்டி, சேலம்.
===
மீண்டும் இயக்கப்படுமா ரெயில்

கடலூர்- சேலம் இடையே மீட்டர் கேஜ் பாதை இருந்த போது கடலூர்-சேலம் இடையே பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. அகல ரெயில் பாதையாக மாற்றும் பணியால் சேலம்- விருத்தாசலம் வரை மட்டும் ரெயில் இயக்கப்பட்டன. தற்போது அகல ரெயில் பாதை பணிகள் முடிந்த பிறகும் இதுவரை இந்த பயணிகள் ரெயிலை பழையபடி கடலூரில் இருந்து இயக்கப்படாமல் சேலம்-விருத்தாசலம் இடையேதான் இயக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சேலம்-விருத்தாசலம் பயணிகள் ரெயில் கடலூர் வரை நீட்டிப்பு செய்து சேலம்-கடலூர் பயணிகள் ரெயில் இயக்க சேலம் கோட்டம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜா.சதீஷ்குமார், ஓசூர்.
===
டவுன் பஸ் இயக்க வேண்டும்

சேலம் மாவட்டம் ஆத்தூர் முதல் ஊனத்தூர் வரை செல்லும் அரசு டவுன் பஸ் எண் 24 கடந்த சில ஆண்டுகளாக தலைவாசல் பஸ் நிலையத்திற்குள் வந்து சென்றது. அந்த டவுன் பஸ், சில மாதங்களாக பஸ் நிலையத்திற்குள் வருவதில்லை. இதனால் செல்லியம்பாலையம், புத்தூர், ஊனத்தூர் செல்லும் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுபற்றி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ்கள், பஸ் நிலையத்துக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-திருமூர்த்தி காந்தி, புத்தூர், சேலம்.
===
தெருநாய்கள் தொல்லை

தர்மபுரி அருகே பாப்பாரப்பட்டி- பாலக்கோடு கூட்டுரோடு பகுதியில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. சாலைகளில் நாய்கள் குறுக்கே வருவதால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் இந்த பகுதியில் விபத்தில் சிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. மேலும் சாலைகளில் செல்வோரை தெருநாய்கள் துரத்தி செல்லும் சம்பவங்களும் நடக்கின்றன. எனவே இந்த பகுதியில் தெருநாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கார்த்திக், தர்மபுரி.
===
தொகுப்பு வீடுகள் சீரமைக்கப்படுமா?

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சி கிருஷ்ணாபுரம் நியூ காலனி பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 15 குடும்பத்தினருக்கு அரசு சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்பட்டது. இந்த வீடுகள் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக மேற்கூரை பெயர்ந்து விழுந்து வருகிறது. இந்த சேதமடைந்த வீடுகளிலேயே குடியிருப்புவாசிகள் வசித்து வருகின்றனர். எனவே சேதமடைந்துள்ள தொகுப்பு வீடுகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், கிருஷ்ணாபுரம், தர்மபுரி.
===

மேலும் செய்திகள்