சிறுவனை கழுத்தை இறுக்கி கொன்ற சித்தி கைது - மற்றொரு குழந்தையின் உடல் நிலை கவலைக்கிடம்

விஜயாப்புரா அருகே சிறுவனை கழுத்தை இறுக்கி கொன்ற சித்தி கைது செய்யப்பட்டார். மற்றொரு குழந்தையின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

Update: 2021-12-10 22:49 GMT
விஜயாப்புரா:
  
2-வது திருமணம்

  விஜயாப்புரா மாவட்டம் மிஞ்சநாலா கிராமத்தை சேர்ந்தவர் வினோத் சவான். இவரது முதல் மனைவி சாருபாய். இந்த தம்பதிக்கு 5 வயதில் சுமித் மற்றும் 3 வயதில் சம்பத் என்ற ஆண் குழந்தைகள் இருந்தது. உடல் நலக்குறைவு காரணமாக சாருபாய் இறந்து விட்டார். இதையடுத்து, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதே கிராமத்தை சேர்ந்த சவிதா என்ற இளம்பெண்ணை வினோத் சவான் 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

  திருமணத்திற்கு பின்பு கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த 2 குழந்தைகளையும் சவிதா வளர்த்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் 2 குழந்தைகளும் கடலைக்காய் சாப்பிட்டதாகவும், பின்னர் மூச்சு திணறி கீழே விழுந்து விட்டதாகவும் அக்கம்பக்கத்தினரிடம் கூறி சவிதா கதறி அழுதார். உடனே அக்கம்பக்கத்தினர் சுமித், சம்பத்தை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

சிறுவன் கொலை

  அங்கு சுமித்தை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். மற்றொரு குழந்தை சம்பத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த குழந்தையின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், 2 குழந்தைகளின் கழுத்திலும் காயங்கள் இருப்பது தெரியவந்தது.

  இதனால் குழந்தைகள் கடலைக்காய் சாப்பிட்டதால் சாகவில்லை என்பதும், கழுத்தை இறுக்கி இருப்பதும் தெரியவந்தது. இதுபற்றி அறிந்ததும் விஜயாப்புரா புறநகர் போலீசார் விரைந்து வந்து சிறுவன் சுமித்தின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

சித்தி கைது

  அப்போது தனது கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தைகளால், கணவருடன் சந்தோஷமாக வாழ முடியவில்லை என்பதாலும், தன்னுடைய வாழ்க்கைக்கு குழந்தைகள் இடையூறாக இருந்ததாலும், செல்போன் சார்ஜர் வயரால் 2 குழந்தைகளின் கழுத்தை இறுக்கியதும், சுமித் மட்டும் உயிர் இழந்தது தெரியவந்துள்ளது.

  இதுகுறித்து விஜயாப்புரா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சவிதாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள். சந்தேகத்தின் பேரில் வினோத் சவானிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் விஜயாப்புராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்