கர்நாடக மேல்-சபை தேர்தலில் 99 சதவீத வாக்குகள் பதிவு

கர்நாடகத்தில் 25 தொகுதிகளுக்கான மேல்-சபை தேர்தலில் 99 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஓட்டு எண்ணிக்கை வருகிற 14-ந்தேதி நடக்கிறது.

Update: 2021-12-10 22:43 GMT
பெங்களூரு:
  
90 வேட்பாளர்கள்

  75 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக மேல்-சபையில் விஜயாப்புரா, பெலகாவி, தார்வார், தட்சிண கன்னடா மற்றும் மைசூரு ஆகிய மாவட்டங்களில் தலா 2 தொகுதிகளும், பீதர், கலபுரகி, உத்தரகன்னடா, ராய்ச்சூர், பல்லாரி, சித்ரதுர்கா, சிவமொக்கா, சிக்கமகளூரு, ஹாசன், துமகூரு, மண்டியா, பெங்களூரு, பெங்களூரு புறநகர், கோலார் மற்றும் குடகு ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு தொகுதி வீதம் மொத்தம் 25 இடங்கள் காலியாகின்றன. இந்த 25 இடங்களில் தற்போது காங்கிரஸ் வசம் 14 தொகுதிகளும், பா.ஜனதா வசம் 7 தொகுதிகளும், ஜனதா தளம்(எஸ்) வசம் 3 தொகுதிகளும் உள்ளன.

  அந்த 25 இடங்களுக்கு 10-ந் தேதி (அதாவது நேற்று) தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தேர்தலில் 90 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் பெண் வேட்பாளர் ஒருவர் மட்டுமே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளும் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தலா 20 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 6 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 3 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. அரசியல் கட்சிகள் மட்டுமின்றி சுயேச்சை வேட்பாளர்கள் 30 பேர் களத்தில் உள்ளனர்.

99½ சதவீத வாக்குப்பதிவு

  இந்த நிலையில் மேல்-சபை தேர்தலையொட்டி நேற்று ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் உள்ளாட்சி பிரதிநிதிகள் வாக்களிக்க தகுதி படைத்தவர்கள் ஆவர். இந்த தொகுதிகளில் உள்ள 99 ஆயிரத்து 62 வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 6,072 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த வாக்குச்சாவடிகளில் திட்டமிட்டப்படி வாக்குப்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் வரிசையில் வந்து வாக்களித்தனர். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சிக்காவி தொகுதியிலும், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா சிகாரிபுரா தொகுதியிலும், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது தொகுதியான பாதாமி நகரிலும் வாக்களித்தனர்.

  முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி சன்னபட்டணாவிலும், அவரது மனைவி அனிதா குமாரசாமி ராமநகரிலும் வாக்களித்தனர். மாநிலத்தில் மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்களது சொந்த தொகுதிகளில் வாக்களித்தனர். உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்களின் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்துவிட்டு சென்றனர். மாநிலத்தில் எந்த பகுதியிலும் அசம்பாவித சம்பவங்கள் நிகழவில்லை. இந்த தேர்தலில் 99½ சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

14-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை

  ஓட்டுப்பதிவு அமைதியாக விறு, விறுப்பாக நடந்து முடிந்தது. வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை 14-ந் தேதி நடக்கிறது. 20 மையங்களில் இந்த ஓட்டு எண்ணிக்கை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேல்-சபையில் தற்போது எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் இல்லை.

  பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து, மேலவை தலைவர் பதவியை ஜனதா தளம்(எஸ்) கட்சியும், துணைத்தலைவர் பதவியை பா.ஜனதாவும் பகிர்ந்து கொண்டுள்ளன.

பா.ஜனதா திட்டம்

  அதனால் இந்த தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று மேல்-சபையில் பெரும்பான்மை பலத்தை பெற வேண்டும் என்று பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. ஒருவேளை பா.ஜனதா பெரும்பான்மை பலத்தை பெற்றால், மேலவை தலைவர் பதவி பா.ஜனதா வசம் சென்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

  மேல்-சபையில் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் ஆதரவு இல்லாமல் மசோதாக்களை நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது. பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை பலம் கிடைத்துவிட்டால், முக்கியமான மசோதாக்களை எந்த சிக்கலும் இன்றி நிறைவேற்றி கொள்ள முடியும்.

மேலும் செய்திகள்