தார்சாலை அமைக்கப்படுமா?
ஈரோடு எல்லப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடம் அருகில் இருந்து சித்தோடு செல்லும் சாலை பாதி அளவில் மட்டும் தார்ரோடாக உள்ளது. மீதம் உள்ள ரோடு மண்ரோடாக உள்ளது. இதனால் வாகனத்தில் செல்லமுடியவில்லை. மேலும் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்ல பள்ளிக்கூட மாணவிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே அந்த ரோட்டை தார்சாலையாக மாற்றி அமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாமோதரன், ஈரோடு.
ஆபத்தான மின்கம்பம்
ஈரோடு பழையபாளையம் சண்முகவல்லி பூங்கா அருகே மின்கம்பம் உள்ளது. இதிலுள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பம் கீழே விழும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக பேராபத்து ஏற்படலாம். ஆகவே அந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் நட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், பழையபாளையம்.
முட்புதர்கள் அகற்றப்படுமா?
சென்னிமலை பேரூராட்சிக்கு உள்பட்ட 10-வது வார்டில் காட்டூர் கிழக்கு பகுதி உள்ளது. இங்கு ஏராளமான வீடுகள் உள்ளன. உப்பிலிபாளையம் ரோட்டில் இருந்து காட்டூர் கிழக்கு பகுதிக்கு செல்ல மண்ரோடு பிரிந்து செல்கிறது. இந்த மண் ரோட்டை ஒட்டியே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாக்கடை கால்வாய் செடி, கொடிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. சாக்கடை கால்வாய் முழுமையாக மூடப்பட்டு போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது. மேலும் அந்த பகுதியில் விஷ ஜந்துக்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை கால்வாயை ஆக்கிரமிப்பு செய்த முள் செடிகளை அகற்றி மண் சாலையை தார் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சோமசுந்தரம், காட்டூர் கிழக்கு பகுதி, சென்னிமலை.
கழிப்பறையை பராமரிக்க வேண்டும்
சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மாக்கினாங்கோம்பை ஊராட்சிக்கு உள்பட்டது அரசூர். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறையில் தண்ணீர் வசதி இல்லை. மேலும் கழிப்பறை பராமரிப்பின்றி அசுத்தமாக காணப்படுகிறது. இதனால் மாணவர்கள் கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். உடனே கழிப்பறைக்கு தண்ணீர் வசதி செய்து கொடுக்கவும், பராமரிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சக்திகுமார், அரசூர்.
போக்குவரத்துக்கு இடையூறு
பெருந்துறை-சென்னிமலை சாலையில் உள்ள ஈங்கூர் பஸ் நிறுத்தம் அருகே ரோட்டோரம் லாரி, கனரக வாகனங்கள் போன்றவற்றை நிறுத்திவிட்டு செல்கிறார்கள். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதால் விபத்து நிகழும் அபாயம் உள்ளது. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் வாகனங்களை நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊர் பொதுமக்கள், ஈங்கூர்.
மின்கம்பம் மாற்றப்படுமா?
பெரிய கொடிவேரி பேரூராட்சி 7-வது வார்டில் உள்ளது சாமி நகர் நேரு வீதி. இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு அருகே உள்ள மின்கம்பம் வாகனங்கள் மோதி சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் மின்கம்பம் கீழே விழுந்து ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடனே அந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்திரமோகன், டி.ஜி.புதூர்.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
ஈரோடு வீரப்பன்சத்திரம் காந்திஜி வீதியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்பு உள்ளது. உடனே சாக்கடை அடைப்பை சரிசெய்து கழிவுநீர் தங்குதடையின்றி செல்ல சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், வீரப்பன்சத்திரம்.