சித்தோடு பகுதியில் அடுத்தடுத்து 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை- மர்மநபர்களுக்கு வலைவீச்சு
சித்தோடு பகுதியில் அடுத்தடுத்து 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பவானி
சித்தோடு பகுதியில் அடுத்தடுத்து 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பூட்டு உடைப்பு
பவானி அருகே உள்ள சித்தோடு சடையம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பன். அதேபோல் சந்திமேடு பைபாஸ் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார், இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் கேசவன். ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர். இவர்கள் 3 பேரும் தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலை இவர்கள் 3 பேரது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
நகை-பணம்
அதைத்தொடர்ந்து அவர்கள் தங்கள் வீடுகளுக்கு வந்து பார்த்தனர். இதில் காளியப்பன் வீட்டில் இருந்த ஒரு பவுன் எடையுள்ள 2 தங்க மோதிரம், ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை.
இதேபோல் சந்திமேடு பைபாஸ் பகுதியில் சிவகுமார் என்பவரது வீட்டில் இருந்த ரூ.22 ஆயிரத்து 500, 2 பவுன் தங்கம் மற்றும் வெள்ளி கொலுசு, அரைஞாண்கொடி மற்றும் கேசவன் என்பவரின் வீட்டில் இருந்த ரூ.25 ஆயிரத்தை காணவில்லை.
கொள்ளை
இவர்கள் 3 பேரும் வீடுகளில் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், நேற்று முன்தினம் நள்ளிரவில் அவர்களது வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு் தப்பித்து சென்றது தெரிய வந்துள்ளது.
இதுபற்றி சித்தோடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதில் 3 பேரது வீடுகளிலும் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் கைவரிசை காட்டியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
நகை பறிப்பு முயற்சி
மேலும் நேற்று முன்தினம் மாலை சுமார் 6 மணி அளவில் பவானி லட்சுமி நகரை அடுத்த பவிஷ் பார்க் அருகே இருசக்கர வாகனத்தில் பெண் ஒருவர் தனது கணவருடன் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், அந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகையை பறிக்க முயன்றுள்ளனர், இதில் சுதாகரித்துக் கொண்ட அந்த பெண் கையில் நகையை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.
இதனால் கொள்ளையர்களின் கையில் நகை சிக்காமல் அறுந்து கீழே விழுந்துள்ளது, மேலும் அந்த பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் இருந்ததால் கொள்ளையர்கள் நகை பறிப்பு முயற்சியை கைவிட்டு அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றனர்.
சித்தோடு பகுதியில் ஒரே நாள் இரவில் 3 வீடுகளில் நகை, பணம் கொள்ளை போனதும், பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற சம்பவமும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்த புகார்களின்பேரில் சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொதுமக்கள் கோரிக்கை
எனவே சித்தோடு பகுதியில் அடுத்தடுத்து நடந்த கொள்ளை சம்பவங்கள் பொதுமக்களை அச்சம் அடைய செய்துள்ளது. எனவே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு கொள்ளையர்களை பிடிக்க வேண்டும். பிடிபடும் கொள்ளையர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.