நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் போராட்டம்

ராதாபுரம் யூனியன் என்ஜினீயர் தற்கொலைக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணை கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2021-12-10 20:24 GMT
நெல்லை:
ராதாபுரம் யூனியன் என்ஜினீயர் தற்கொலைக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணை கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராதாபுரம் யூனியனில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வந்த சந்தோஷ்குமார் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஊழியர்கள் மீது திணிக்கப்படும் அரசியல் நெருக்கடிகளை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் பொன்ராஜ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மணி முன்னிலை வகித்தார். செயலாளர் லயோலா ஜோசப் ஆரோக்கியதாஸ், ஒன்றிய பொறியாளர் பியூலா செல்வி ரொட்டேரிகோ, பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் கங்காதரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் மாவட்ட இணை செயலாளர் பாலசுப்பிரமணியன், பிரசார குழு முருகன், மகளிர் துணைக்குழு மங்கையர்க்கரசி, மாவட்ட இணைச்செயலாளர் செலின் சங்கரகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் வீரபுத்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வேலை நிறுத்தம்
இதுகுறித்து மாவட்ட செயலாளர் லயோலா ஜோசப் ஆரோக்கியதாஸ் கூறியதாவது:-
ராதாபுரம் யூனியன் உதவி என்ஜினீயர் சந்தோஷ்குமார் அரசியல் பிரமுகர்களால் தொடர்ந்து நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளார். அவர் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு தற்கொலைக்கு தூண்டப்பட்டு உள்ளார். இதற்கு காரணமான அரசியல் பிரமுகர்கள் மற்றும் உடந்தையாக செயல்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த வேண்டும். தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்டமாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்