அரிசி-மருந்து கடைகளின் பூட்டை உடைத்து ரூ.41 ஆயிரம் திருட்டு
அரிசி-மருந்து கடைகளின் பூட்டை உடைத்து ரூ.41 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
பெரம்பலூர்:
2 கடைகளில் திருட்டு
பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் சாமியப்பா நகர் 7-வது குறுக்கு தெருவை சேர்ந்த தவுலத்கான் (வயது 58) என்பவர் அரிசி கடையும், சிறுவாச்சூர்-அயிலூர் ரோட்டை சேர்ந்த வினோத் (37) என்பவர் மருந்து கடையும் வைத்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தவுலத்கானும், வினோத்தும் வியாபாரத்தை முடித்து கொண்டு தங்களது கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றனர்.
இந்நிலையில் நேற்று காலை அரிசி கடை மற்றும் மருந்து கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்ட அக்கம், பக்கத்தினர் இதுகுறித்து கடைகளின் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு தவுலத்கானும், வினோத்தும் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது அரிசி கடையின் உள்ளே கல்லாவில் இருந்த ரூ.37 ஆயிரமும், மருந்து கடையில் இருந்த ரூ.4 ஆயிரம் ரொக்கமும் திருட்டு போயிருந்தது.
போலீசார் விசாரணை
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் அங்கு வந்து கடைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர். இதற்கிடையே போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 2 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்ட சம்பவம் வணிகர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.