16 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய 73 ஏரிகள்

16 ஆண்டுகளுக்கு பிறகு 73 ஏரிகளும் நிரம்பின.

Update: 2021-12-10 19:07 GMT
பெரம்பலூர்:

வடகிழக்கு பருவமழையால்...
பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்தது. இதனால் மருதையாறு, கல்லாறு ஆகியவற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. விசுவக்குடி, கொட்டரை ஆகிய நீர்த்தேக்கங்கள் நிரம்பி உபரிநீர் வெளியே செல்கிறது. மேலும் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 73 ஏரிகள், வடகிழக்கு பருவமழையால் கடந்த அக்டோபர் மாத இறுதியில் இருந்து ஒவ்வொன்றாக நிரம்பிய நிலையில், தற்போது அந்த ஏரிகள் அனைத்தும் நிரம்பி உபரிநீர் மறுகாலில் பாய்ந்து செல்கிறது.
இதனால் விவசாயிகளும், அந்தந்த பகுதி மக்களும் மகிழ்ச்சியடைந்தனர். சில ஏரிகள் பல ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியதால் விவசாயிகள், பொதுமக்கள் கிடா வெட்டி, பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். சில ஏரிகளில் பூக்கள் தூவி தண்ணீரை வரவேற்றனர். தற்போது ஏரிகளில் சிலர் உற்சாக குளியலிட்டும் செல்கின்றனர். விவசாயிகள் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஆக்கிரமிப்பு
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 73 ஏரிகளும் கடந்த 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுதான் முழுவதும் நிரம்பியுள்ளன. மேலும் இந்த ஆண்டு தான் மாவட்டத்தில் அதிகமாக மழை பெய்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு ஏரிகளில் முறையான குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படாததால் பெரும்பாலான ஏரிகளில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன. இதனால் மழைக்காலம் முடிந்த பிறகு அந்த ஏரிகளில் உள்ள தண்ணீர் வேகமாக வற்றிவிடும்.
மேலும் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து வாய்க்கால்கள், உபரி நீர் செல்லும் வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாததால் மழைக்காலங்களில் அதில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர், அதன் அருகே உள்ள விளை நிலங்களுக்கு புகுந்ததால் பயிர்களும் பாதிக்கப்பட்டது. சில ஏரிகள் தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
குடிமராமத்து பணிகள்
எனவே இனி வருங்காலங்களில் ஏரிகளில் முறையான குடிமராமத்து பணிகளை செய்யவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்றனர்.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
செட்டிகுளம்-9, பாடாலூர்-4, அகரம்சீகூர்-20, லெப்பைக்குடிக்காடு-8, புதுவேட்டக்குடி-2, பெரம்பலூர்-11, எறையூர்-11, தழுதாழை-6, வி.களத்தூர்-2, வேப்பந்தட்டை-8.

மேலும் செய்திகள்