கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் வழங்கியதில் ரூ.1½ கோடி முறைகேடு

கீரனூரில் கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் வழங்கியதில் ரூ.1½ கோடி முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-12-10 19:04 GMT
புதுக்கோட்டை 
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் நகைக்கடன் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவுத்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:- 
கீரனூரில் தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் நகைக்கடன் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது. இதில் வாடிக்கையாளர்கள் பெயரில் தங்க நகைகளை அடகு வைத்து கடன் பெற்றது போல மோசடி செய்துள்ளனர். மொத்தம் ரூ.1½ கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. தஞ்சாவூரில் இருந்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் வந்து விசாரிக்கின்றனர்.
3 பேருக்கு தொடர்பு
வங்கியில் இருப்பில் உள்ள தங்க நகைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கடன் வழங்கப்பட்டது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த முறைகேட்டில் சங்க செயலாளர், கண்காணிப்பாளர், நகை மதிப்பீட்டாளர் ஆகியோருக்கு தொடர்பு இருந்துள்ளது. முழுமையான விசாரணைக்கு பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகளின் ஆய்வு மற்றும் விசாரணை ஓரிரு நாளில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில் முறைகேடு செய்த பணத்தை சம்பந்தப்பட்டவர்கள் வங்கியில் திருப்பி வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் முறைகேடு செய்தது தொடர்பாக துறைரீதியான நடவடிக்கை அல்லது குற்ற நடவடிக்கை எடுக்கப்படலாம் என தெரிகிறது.

மேலும் செய்திகள்