இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலையில் வாகனங்களை நிறுத்தி போராட்டம்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலையில் வாகனங்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மயிலாடுதுறை நகரில் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-12-10 18:18 GMT
மயிலாடுதுறை:
பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலையில் வாகனங்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மயிலாடுதுறை நகரில் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போராட்டம்
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி  வாகனங்களை ஆங்காங்கே நிறுத்த வேண்டும் என பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 
அதன்படி மயிலாடுதுறையில் நேற்று அரசு ஆஸ்பத்திரி சாலை காவிரி பாலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சிங்காரவேலன் தலைமையில் வாகனங்களை நிறுத்தி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை குறைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. 
வாகனங்கள் அணிவகுத்து நின்றன
இந்த போராட்டத்தின் காரணமாக சாலையில் இரு பக்கங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் 10 நிமிடங்கள் அணிவகுத்து நின்றன. இதில் இயற்கை விவசாயி ராமலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் குமரேசன், மாதர் சங்க பொறுப்பாளர் வேம்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேபோல பஸ் நிலையம் அருகே கிட்டப்பா அங்காடி முன்பு, கண்ணாரத்தெரு சந்திப்பு, பூக்கடை தெரு, தரங்கம்பாடி சாலை, பட்டமங்கலத்தெரு பாலக்கரை உள்பட 10 இடங்களில் பல்வேறு தொழிற் சங்கங்களை சேர்ந்தவர்கள் சாலையில் வாகனங்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதன் காரணமாக நேற்று நகரில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொள்ளிடம்
 கொள்ளிடம் கடைவீதியில் சிதம்பரம்-சீர்காழி தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 10 நிமிடம் சாலையில் வாகனங்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்