பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வாகனங்களை சாலையில் நிறுத்தி போராட்டம்-பல்வேறு தொழிற்சங்கம் சார்பில் நடந்தது

நாமக்கல், பள்ளிபாளையத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வாகனங்களை சாலையில் நிறுத்தி தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-12-10 17:59 GMT
நாமக்கல்:
போராட்டம்
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி போராட்டம் நடந்தது. இதற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வேலுசாமி தலைமை தாங்கினார். அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தின் கிளைத்தலைவர்கள் பழனிசாமி, வரதராஜன், கிளை செயலாளர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விலைவாசி உயர்வதோடு, மோட்டார் வாகன தொழில் பாதிக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். 
இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட உதவி செயலாளர் சிவராஜ், நாமக்கல் மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் பழனிவேல், ஊழியர் சங்க நிர்வாகிகள் மாதேஸ்வரன், ஜெயமணி, சங்க நிர்வாகிகள் சுப்பிரமணிய பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
பள்ளிபாளையம்
பள்ளிபாளையம் போலீஸ் நிலையம் அருகே பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் தங்களது வாகனங்களை சாலையில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் அசோகன் தலைமை தாங்கினார். விவசாய சங்க மாவட்ட செயலாளர் பெருமாள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இதில் விசைத்தறி தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றியக்குழு செயலாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
எருமப்பட்டி
எருமப்பட்டி பஸ் நிறுத்தத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தங்களது வாகனங்களை சாலையில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் சிவசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்