நாமக்கல் மாவட்டத்தில் இன்று 516 முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 516 முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

Update: 2021-12-10 17:59 GMT
நாமக்கல்:
இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தடுப்பூசி முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) 14-ம் கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், அரசு பள்ளிகள் என 475 இடங்கள் மற்றும் 41 நடமாடும் குழுக்கள் என மொத்தம் 516 முகாம்கள் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும். இதில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
டாக்டர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள், பயிற்சி செவிலியர்கள் மற்றும் பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் என மொத்தம் 5,720 பேர் தடுப்பூசி முகாம் பணிகளில் ஈடுபட உள்ளனர். 
தயக்கமின்றி செலுத்த வேண்டும்
தடுப்பூசி செலுத்தாமல் உள்ளவர்கள் தயக்கமின்றி செலுத்தி கொள்ள முன்வர வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 10 லட்சத்து 48 ஆயிரத்து 742 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 6 லட்சத்து 16 ஆயிரத்து 672 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டு உள்ளது. 
அதேபோல் மாவட்டத்தில் இதுவரை  13 கட்டமாக நடந்த தடுப்பூசி முகாம்களில் மட்டும் 5 லட்சத்து 13 ஆயிரத்து 473 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்