நாமக்கல் மாவட்டத்தில் வேளாண் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்த கடன் வசதி-கலெக்டர் ஸ்ரேயாசிங் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் வேளாண் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்த கடன் வழங்கப்படுவதாக கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்:
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேளாண் கடன்
கிராம அளவில் வேளாண் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தி வேளாண் வளர்ச்சியை அதிகரிக்க மத்திய அரசால் வேளாண் உள்கட்டமைப்பு நிதியின் கீழ் கடன் பெறும் திட்டம் 13 ஆண்டுகள் செயல்படுத்தப்பட உள்ளது. அதன் கீழ் தமிழகத்திற்கு ரூ.5,990 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு 7 ஆண்டு காலத்திற்கு, ஆண்டுக்கு 3 சதவீத வட்டி குறைப்பு மற்றும் கடன் உத்திரவாதமும் வழங்கப்படுகிறது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் கூட்டமைப்புகள், சுய உதவிக்குழுக்கள், வேளாண் தொழில் முனைவோர், புதிதாக தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்கள், வேளாண் விளைபொருட்கள் விற்பனை குழுமங்கள், தேசிய மற்றும் மாநில கூட்டுறவு கூட்டமைப்புகள், விவசாயிகள் மற்றும் கூட்டுப்பொறுப்பு குழுக்கள் ஆகியவை இந்த திட்டத்தில் பயன்பெறலாம்.
பதப்படுத்தும் மையங்கள்
அறுவடைக்குப்பின் வேளாண்மைக்கான உள்கட்டமைப்புகளான சேமிப்பு கிடங்குகள், மின் சந்தையுடன் கூடிய வினியோக தொடர் சேவை, சேமிப்பு கலன்கள், விலை பொருட்களை தரம் பிரித்து மதிப்புக்கூட்டி மதிப்பிடும் எந்திரங்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறலாம். மேலும் பதப்படுத்தும் மற்றும் பழங்களை பழுக்க வைக்கும் மையங்களும் சமுதாய வேளாண் கூட்டமைப்புகளான நவீன மற்றும் துல்லிய பண்ணையம், அரசு மற்றும் தனியார் பங்கேற்புடன் அமைக்கப்படும் உட்கட்டமைப்புகளுக்கும் இதில் கடன் வழங்கப்படும்.
எனவே தகுதி உடைய பயனாளிகள் கூட்டுறவு சங்க இணை பதிவாளர், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், நபார்டு வங்கி மேலாளர், வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் விற்பனைத்துறை அலுவலர்களை அணுகி பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.