தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா இன்று(சனிக்கிழமை) காலையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சுசீந்திரம்,
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா இன்று(சனிக்கிழமை) காலையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மார்கழி பெருந்திருவிழா
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான மார்கழி திருவிழா இன்று (சனிக்கிழமை) காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 20-ந்தேதி வரை 10 நாட்கள் வெகு விமரிசையாக நடக்கிறது.
திருவிழாவையொட்டி முன்னதாக நேற்று காலை 9.15 மணிக்கு மேல் கோவிலில் உள்ள சித்திர சபை மண்டபத்தில் மஞ்சள் வாங்கும் நிகழ்வு நடந்தது. சித்திர சபை மண்டபத்தில் உள்ள நடராஜ மூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது.
கொடிப்பட்டம் ஊர்வலம்
தொடர்ந்து 18 ஊர் பிடாகைகள், வட்ட பள்ளிமடம் ஸ்தானிகர் டாக்டர் சர்மா, தெற்கு மண்மடம் நித்திய காரிய யோக ஸ்தானிகர் திலீபன் நம்பூதிரி, ஆதிசேஷ் நம்பூதிரி, கண்காணிப்பாளர் செந்தில்குமார், மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் திருவிழா பத்திரிகைகள் மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமும், பத்திரிகை வழங்குதல், மாலை 4.30 மணி அளவில் கோட்டார் இடலாக்குடி ருத்ரபதி விநாயகர் கோவிலில் இருந்து மரபுப்படி பட்டாரியார் சமுதாயத்தினர் கொடி பட்டத்தை மேளதாளம், வெடி முழக்கத்துடன் முத்துக்குடை ஏந்தி ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
சுசீந்திரம் கோவில் நுழைவாயில் முன்பு ஊர் மக்களும், சுசீந்திரம் தெய்வீக இயல், இசை, நாடகச் சங்கத்தினரும் வெடி முழக்கத்துடன் மலர் தூவி வரவேற்றனர். தொடர்ந்து கொடிப்பட்டம் 4 ரத வீதிகள் வழியே ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மீண்டும் கோவில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
கொடியேற்றம்
கொடியேற்று விழாவான இன்று காலை 6 மணிக்கு மாணிக்கவாசகர் பூஜை, 7.30 மணிக்கு மேல் தாணுமாலையன் சன்னதியின் எதிரே உள்ள கொடிமரத்தில் தெற்கு மண்மடம் ஸ்தானிகர் கொடியேற்றி வைக்கிறார். வட்ட பள்ளிமடம் ஸ்தானிகர் சிறப்பு பூஜைகளை செய்கிறார். தொடர்ந்து திருமுறை பெட்டக ஊர்வலம் நடக்கிறது.
விழா நாட்களில் தினமும் மாலையில் கோவில் கலை அரங்கத்தில் சமயச் சொற்பொழிவு, சொல்லரங்கம், நாடகம், பக்தி மெல்லிசை, பக்தி இன்னிசை, பரத நாட்டியம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
தேரோட்டம்
விழாவில் 13-ந் தேதி இரவு 10.30 மணிக்கு கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணியசாமி, வேளிமலை குமாரசாமி தனது தாய், தந்தையர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியை காண வரும் மக்கள் மார் சந்திப்பு நிகழ்ச்சியும், 15-ந்தேதி காலை 5 மணிக்கு பஞ்சமூர்த்தி தரிசனமும், 6 மணிக்கு வீரமார்த்தாண்ட விநாயகர் கோவில் முன் சாமி, அம்பாள், பெருமாள் மும்மூர்த்திகளை கருடன் வலம் வரும் நிகழ்ச்சி, 17-ந் தேதி இரவு 10.30 மணிக்கு கைலாச பர்வத வாகனத்தில் சாமி வீதி உலா வருதல், 19-ந் தேதி காலை 7.30 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. இதில் சாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர்ஆகிய 3 தேர்கள் உலா வருதல் நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு சப்தவர்ண காட்சி நடக்கிறது.
ஆராட்டு
திருவிழாவின் இறுதி நாளான 20-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனம், மாலை 5 மணிக்கு நடராஜமூர்த்தி வீதி உலா வருதல், இரவு 9 மணிக்கு ஆராட்டு நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில், கண்காணிப்பாளர் செந்தில்குமார், மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் சுசீந்திரம் தெய்வீக இயல், இசை, நாடக சங்கத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்து வருகின்றனர்.