கிளியாளம்மன் கோவில் கும்பாபிஷேகம்
பரங்கிப்பேட்டை அருகே உள்ள கிளியாளம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பரங்கிப்பேட்டை,
பரங்கிப்பேட்டை அருகே உள்ளது பெரியகுமட்டி கிராமம். இக்கிராமத்தில் பிரசித்திபெற்ற கிளியாளம்மன் கோவில் உள்ளது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ரூ.1 கோடி செலவில் திருப்பணிகள் நிறைவடைந்து நேற்று கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு, கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா கடந்த 8-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து முதல் கால யாக சாலை பூஜை, 2-ம் காலம் என மொத்தம் 5 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
கும்பாபிஷேக நாளான நேற்று யாக சாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய கலசங்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலகமாக கோவில் கோபுரத்திற்கு எடுத்துவரப்பட்டது. தொடர்ந்து கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் கோவில் வளாகத்தில் உள்ள அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்கள் சன்னதிக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.
பக்தர்கள் பங்கேற்பு
விழாவில் பெரியகுமட்டி, புதுச்சத்திரம், வில்லியநல்லூர், மணிக்கொல்லை, பரங்கிப்பேட்டை, அரிராஜபுரம், அரியகோஷ்டி, தீர்த்தாம்பாளையம், மஞ்சக்குழி, சேந்திரக்கிள்ளை, தச்சக்காடு உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகத்தில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன், இந்துசமய அறநிலைய துறை உதவி ஆணையர் பரணிதரன், அகத்தியன் பவுண்டேஷன் நிறுவனர் ஈஸ்வர்ராஜலிங்கம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.