அழகியபாண்டியபுரம்,
பூதப்பாண்டி அருகே உள்ள நாவல்காடு பகுதியில் அரசியர் கால்வாய் உள்ளது. அந்த கால்வாயில் நேற்று காலையில் நிர்வாண நிலையில் ஒரு ஆண் பிணம் மிதந்தது. அந்த வழியாக சென்றவர்கள் இதைகண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இதுபற்றி பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கால்வாயில் மிதந்த பிணத்தை பார்வையிட்டனர். பிணமாக மிதந்தவர் சகதியில் சிக்கிய நிலையில் கவிழ்ந்தபடி கிடந்தார். அவரது பெயர், ஊர் விவரம் எதுவும் தெரியவில்லை. அதைதொடர்ந்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்?. எந்த ஊரை சேர்ந்தவர், அவர் கால்வாயில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாராவது கொலை செய்து அங்கு வீசினார்களா? என பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.