வாணியம்பாடி
வாணியம்பாடியை அடுத்த கொடையாஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜின் மகன் தினேஷ் (வயது 18), கூலித்தொழிலாளியான அவர் தேங்காய் மண்டியில் வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை 4 மணியளவில் தினேஷ் தனது பாட்டி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது வாணியம்பாடியை அடுத்த ராமையன்தோப்பு பகுதியில் உள்ள பாலாறு கிளையாற்றில் நடந்து சென்றபோது, திடீரென தண்ணீரில் மூழ்கினார். அவரின் அலறல் சத்தத்தைக் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடிவந்து அவரை மீட்க முயன்றனர். இருப்பினும் ஆழமான பகுதிக்கு சென்றதால் மீட்க முடியவில்லை. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி அங்கிருந்தவர்கள் தினேசை பிணமாக மீட்டனர்.
இதுகுறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் விரைந்து வந்து, தினேசின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.