விழுப்புரம் சி.ஐ.டி.யு. அமைப்பினர் வாகனங்களை நிறுத்தி போராட்டம்

பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி சி.ஐ.டி.யு. அமைப்பினர் வாகனங்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2021-12-10 16:27 GMT
விழுப்புரம், 

பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், இந்த விலையை உடனடியாக மத்திய அரசு குறைக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் சி.ஐ.டி.யு. சார்பில் 10 நிமிட நேரம் வாகனங்களை நிறுத்தி போராட்டம் செய்தனர். அந்த வகையில் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகில் நேற்று பகல் 12 மணிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் சம்மேளனம், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம், தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் ஆகிய சி.ஐ.டி.யு. அமைப்புகள் சார்பில் வாகனங்களை நிறுத்தி போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். இதில் சி.ஐ.டி.யு. அம்பிகாபதி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, சி.ஐ.டி.யு. மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்க மாவட்ட செயலாளர் அருள்ஜோதி, அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் சம்மேளன நிர்வாகி இளம்வழுதி, ஆட்டோ தொழிலாளர் சம்மேளன மாவட்ட தலைவர் வெங்கடேசன், சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் பழனி உள்பட பலர் கலந்துகொண்டு பெட்ரோல்- டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இவர்கள் பகல் 12 மணி முதல் 12.10 மணி வரை வாகனங்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்