100 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள்
திருவாரூரில் 100 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.
திருவாரூர்:
திருவாரூரில் 100 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.
சமுதாய வளைகாப்பு விழா
திருவாரூர் தண்டலை ஊராட்சி விளமலில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் 100 கர்ப்பிணிகளுக்கு 11 வகையான சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
ஒரு குழந்தையின் வளர்ச்சி, கருவாக உருவான நாளிலிருந்தே ஆரம்பமாகிறது. கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால் தான் அவர்களுக்கு பிறக்கும் குழந்தை ஆரோக்கியமான, அறிவான குழந்தையாக இருக்கும் என்பதற்காக அறிவியல் பூர்வமான நிகழ்ச்சி தான் சமுதாய வளைகாப்பு ஆகும்.
அனைத்து கர்ப்பிணி பெண்களும்
வசதி வாய்ப்பு குறைவால் இந்த நிகழ்ச்சியை நடத்த முடியாத குடும்பத்தில் குழந்தைகள் பாதிக்கப்பட கூடாது என்ற நோக்கத்தில் வளைகாப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சாதி, மத வேறுபாடின்றி அனைத்து கர்ப்பிணி பெண்களும் பயன் பெறுகின்றனர்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இதில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கார்த்திகா, திருவாரூர் ஒன்றியக்குழு தலைவர் தேவா, ஒன்றியக்குழு உறுப்பினர் முருகேசன், குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் ஜெனிபர்கிரேஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.