கோடநாடு காட்சி முனைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
கோடநாடு காட்சி முனைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
கோத்தகிரி
கோத்தகிரி பகுதியில் இதமான சீதோஷ்ண நிலை நிலவுவதால் கோடநாடு காட்சி முனைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கோடநாடு காட்சி முனை
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களில் கோடநாடு காட்சி முனை முக்கியமான ஒன்றாக திகழ்ந்து வருகிறது. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கோத்தகிரியில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவிலும், கடல் மட்டத்திலிருந்து சுமார் 6,500 அடி உயரத்தில் உள்ள கோடநாடு காட்சி முனைக்கு சென்று,
அங்கு அமைக்கப்பட்டுள்ள தொலைநோக்கியில் இருந்து பவானிசாகர் அணைக்கட்டு, தெங்குமரஹாடா, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சமவெளிப் பகுதிகள், ரங்கசாமி மலை, மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்டவற்றை கண்டுகளித்து வருகின்றனர்.
கோத்தகிரி பகுதியில் கடந்த ஒரு வார காலமாக தொடர் மழை பெய்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் மழை பெய்தாலும், பகலில் வெயிலுடன் கூடிய இதமான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
இதன் காரணமாக சமவெளிப் பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வர தொடங்கியுள்ளனர். இதனால் கோடநாடு காட்சி முனை பகுதிக்கு கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
கோடநாடு காட்சி முனையில் இருந்து கம்பீரமாக காட்சியளிக்கும் ரங்கசாமி மலை சிகரத்திற்கு, வெகு அருகாமையில் உள்ள நீர்வீழ்ச்சியில் தற்போது வெள்ளம் பெருக்கெடுத்து அருவி நீர் வெள்ளை நிறத்தில் பால் போலக்கொட்டுவது கண்கொள்ளா காட்சியாக உள்ளது.
இந்த காட்சி கோடநாடு வரும் சுற்றுலா பயணிகளை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. மேலும் கோடநாடு காட்சி முனையிலிருந்து தெங்குமரஹாடா கிராமம், மேற்கு தொடர்ச்சி மடிப்பு மலைகள், பவானி ஆறு ஆகியவற்றையும் ஆர்வத்துடன் கண்டுகளிப்பதுடன், அவர்கள் புகைப்படமும் எடுத்து செல்கின்றனர்.