வங்கி ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக ஆசிரியரை ஏமாற்றி ரூ.60 ஆயிரம் திருட்டு

வங்கி ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக கூறி ஓய்வு பெற்ற ஆசிரியரை ஏமாற்றி ரூ.60ஆயிரம் திருடப்பட்டது.

Update: 2021-12-10 14:18 GMT
பணம் எடுத்து தருவதாக...

திருவள்ளூரை அடுத்த ஒதிக்காடு மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் டேவிட் (வயது 64). ஓய்வு பெற்ற ஆசிரியர். கடந்த சில நாட்களுக்கு முன்பு டேவிட் திருவள்ளூர் நகரின் மையப்பகுதியில் உள்ள பிரபல வங்கியில் பணம் எடுக்க சென்றார். அப்போது அவர் அங்குள்ள வங்கியின் ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்க வரிசையில் நின்று கொண்டிருந்தார்.

தனது கார்டை ஏ.டி.எம். எந்திரத்தில் செலுத்திய போது பணம் வரவில்லை. இதை பார்த்த அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த டிப்டாப் நபர் ஒருவர் தான் பணத்தை எடுத்து தருவதாக அவரிடம் பேச்சு கொடுத்தார். இதை நம்பிய டேவிட் தனது ஏ.டி.எம். கார்டை அந்த நபரிடம் கொடுத்துள்ளார். அதை வாங்கிய டிப்டாப் நபர் ஏ.டி.எம். எந்திரத்துக்குள் போட்டு பார்த்தார். பணம் வரவில்லை என்று கூறி மீண்டும் அவரிடம் வேறு ஒரு கார்டை ஏமாற்றி கொடுத்தார். அந்த கார்டை பெற்றுக்கொண்ட அவர் சென்றுவிட்டார்.

ரூ.60 ஆயிரம்

சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.60 ஆயிரம் எடுத்ததாக அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக சென்று வங்கியை நாடிய போது ஏ.டி.எம்.மில் இருந்து பணம் எடுத்தது தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் தன்னிடம் பணம் எடுத்து தருவதாக கூறி நூதன முறையில் ஏமாற்றிய மர்ம நபரை கண்டுபிடித்து தருமாறு திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் அந்த வங்கியின் உள்ளேயும், வெளியேயும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மூலம் மர்ம நபர் யார் என்று போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்