ரோட்டில் வாகனங்களை மறித்து போராட்டம்

ரோட்டில் வாகனங்களை மறித்து போராட்டம்

Update: 2021-12-10 14:11 GMT


கோவை

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரோட்டில் வாகனங்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தை சேர்ந்த 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க மையம் சார்பில் கோவையில் நேற்று நண்பகல் 12 மணி அளவில் சிக்னல்களில் 10 நிமிடம் வாகனங்களை நிறுத்தும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.


அதன்படி, சிங்காநல்லூரில் சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் பத்மநாபன் தலைமையிலும், 

வடகோவையில் பொருளாளர் வேலுசாமி தலை மையிலும், 100 அடி சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையிலும் நேற்று 10 நிமிடம் வாகனங்களை நிறுத்தி போராட்டம் நடைபெற்றது.

வாகனங்களை மறித்தனர்

காந்திபுரம் கிராஸ்கட் ரோடு சிக்னலில் சி.ஐ.டி.யூ. கோவை மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வாகனங்களை நிறுத்தி போராட்டம் நடைபெற்றது. 

அப்போது சி.ஐ.டி.யூ. சங்கத்தினர் தங்களின் வாகனங்களை 10 நிமிடம் நிறுத்தினர்.

இதற்கிடையே சிக்னலில் நின்ற சில வாகனங்கள் புறப்பட்டு செல்ல தொடங்கின. 

உடனே அந்த வாகனங்களை சி.ஐ.டி.யூ. சங்கத்தினர் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில் மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.ராதிகா, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

அவர்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மத்திய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர்.

 இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேரை காட்டூர் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்