திருவள்ளூரை அடுத்த விடையூர் ஊராட்சியில் கிராம வளர்ச்சி குறித்து சிறப்பு கிராம சபை கூட்டம்
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் விடையூர் ஊராட்சியில் நேற்று கிராம வளர்ச்சி குறித்து சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு விடையூர் ஊராட்சி மன்ற தலைவர் செ.பா.ஏழுமலை தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணை தலைவர் மாலா மகாலிங்கம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழரசு, சுகாதார ஆய்வாளர் ஞானசேகர், ஊராட்சி செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் விடையூர் ஊராட்சியில் உள்ள பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ரேஷன்கடை போன்ற பகுதிகளை தூய்மையாக பராமரித்தல், அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தல் மற்றும் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைப்பது மற்றும் கிராம வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் ஊராட்சியில் அடிக்கடி ஏற்படும் குறைந்த மின் அழுத்த மின்சாரத்தை போக்க பழைய டிரான்ஸ்பார்மர்களை மாற்றி புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து, தங்கு தடையின்றி குறைந்த மின் அழுத்த மின்சாரம் இல்லாமல் மின்சார வினியோகம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் வார்டு உறுப்பினர்கள் உள்பட திரளான பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.