பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி வாகனங்களை 10 நிமிடங்கள் சாலையில் நிறுத்தி போராட்டம் தேனி உள்பட 8 இடங்களில் நடந்தது

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி வாகனங்களை 10 நிமிடங்கள் சாலையில் நிறுத்தி தேனி உள்பட 8 இடங்களில் போராட்டம் நடந்தது.

Update: 2021-12-10 12:58 GMT
தேனி:
பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவும், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவும் அனைத்து வாகன ஓட்டிகளும் 10 நிமிடங்கள் வாகனங்களை சாலையில் நிறுத்தி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி தேனி மாவட்டத்தில் 8 இடங்களில் இந்த போராட்டம் நேற்று நடந்தது. இதையடுத்து தேனி நேரு சிலை சிக்னல் பகுதிக்கு இருசக்கர வாகனங்கள், ஆட்டோவில் சி.ஐ.டி.யு. நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் பலர் வந்தனர். அவர்கள் சிக்னல் பகுதியில் வாகனங்களை சாலையில் 10 நிமிடங்கள் நிறுத்தி மத்திய அரசுக்கு எதிராகவும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர். இதில், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் தர்மர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முனீஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
கம்பத்தில் சி.ஐ.டி.யு. நிர்வாகி முருகேசன் தலைமையில் போராட்டம் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கம்பம் பகுதிக்குழு செயலாளர் லெனின் மற்றும் பலர் கலந்துகொண்டனர். பெரியகுளத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையிலும், கோம்பையில் மாவட்ட துணைத்தலைவர் மோகன் தலைமையிலும் போராட்டம் நடந்தது.
இதுபோல சின்னமனூர், ஆண்டிப்பட்டி, கடமலைக்குண்டு, போடி ஆகிய இடங்களிலும் சாலையில் 10 நிமிடங்கள் வாகனங்களை நிறுத்தி நிறுத்து போராட்டம் நடந்தது. இதன் காரணமாக அப்பகுதிகளில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்