ஸ்ரீபெரும்புதூர் அருகே இருவேறு விபத்துகளில் 2 பேர் சாவு

ஸ்ரீபெரும்புதூர் அருகே இருவேறு விபத்துகளில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2021-12-10 12:17 GMT
சாவு

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 65). கட்டிட தொழிலாளி. நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பும்போது ஸ்ரீபெரும்புதூர் பஸ்நிலையம் அருகே பெங்களூரு சாலையில் தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அதே லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான ஏழுமலை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு விபத்து

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (36). லாரி டிரைவர். இவர் நேற்று காலை காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த போந்தூரில் இருந்து லாரியை ஓட்டிக்கொண்டு காட்டாராம்பாக்கம் செல்ல இருங்காட்டுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் சென்னை நோக்கி வந்த லாரி பாலாஜி ஓட்டி வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் பாலாஜி லாரியின் முன் பக்க கண்ணாடி உடைத்து கொண்டு கீழே விழுந்தார். அப்போது சென்னை நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி பாலாஜி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்