நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் வெளியீடு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.;
வாக்காளர் பட்டியல் வெளியீடு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு வாரியான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான டாக்டர் ஆர்த்தி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிபிரதிநிதிகளின் முன்னிலையில் வெளியிட்டார்.
காஞ்சீபுரம் மாநகராட்சி இணை இயக்குனரும், ஆணையாளருமான நாராயணன் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். அப்போது உள்ளாட்சி தேர்தல் பிரிவு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
பின்னர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி கூறியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள சட்டமன்ற தொகுதி வாரியான வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகளுக்கு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
1,300 அலுவலர்கள்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் அடங்கிய காஞ்சீபுரம் மாநகராட்சி மற்றும் வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 3 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 287 வாக்குச்சாவடிகளில் 120 ஆண் வாக்காளர் வாக்குச்சாவடிகளும், 120 பெண் வாக்காளர் வாக்குச்சாவடிகளும், 47 அனைத்து வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
மேற்படி வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
தற்போது மேற்படி வாக்குச்சாவடிகளில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 124 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 42 ஆயிரத்து 691 பெண் வாக்காளர்களும், 32 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 75 ஆயிரத்து 847 வாக்காளர்கள் உள்ளனர்.
மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்யப்படும் இறுதி நாள் வரை வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான விவரங்கள் வருவாய்த்துறையினரிடமிருந்து பெறப்பட்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். ஏறத்தாழ 1,300 அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.