அதிக மையங்களை தொடங்கி மாநிலத்தில் 2-வது இடம் பிடித்தது மதுரை

மதுரை மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்திற்காக சுமார் 1,600 மையங்கள் தொடங்கப்பட்டு உள்ளதாக மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன் தெரிவித்தார்.

Update: 2021-12-09 22:23 GMT
மதுரை, 
மதுரை மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்திற்காக சுமார் 1,600 மையங்கள் தொடங்கப்பட்டு உள்ளதாக மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன் தெரிவித்தார்.
இல்லம் தேடி கல்வி
தமிழக அரசு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அந்தந்த பகுதியில் தினந்தோறும் மாலை நேரங்களில் தன்னார்வலர்கள் மூலம் சுமார் 2 மணி நேரம் மட்டும் கல்வி கற்றுத்தரும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. 
இல்லம் தேடி கல்வி என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம், மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன் கூறியதாவது:-
மதுரை மாவட்டத்தை பொறுத்தமட்டில், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 2 லட்சத்து 14 ஆயிரத்து 339 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 785 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் தன்னார்வலர்களாக 13 ஆயிரத்து 765 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்னர், முதல் கட்டமாக சுமார் 8 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் 3,200 பேர் மட்டுமே எழுத்து தேர்வில் பங்கேற்றனர். இதில் சுமார் ஆயிரம் பேருக்கு 2 நாள் பயிற்சி வழங்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி சுமார் 2,300 தன்னார்வலர்கள் பயிற்சி முடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1600 மையங்கள்
பின்னர் பயிற்சி முடித்தவர்களுக்கு, அந்தந்த பகுதியில் உள்ள மையங்களில் வகுப்பு எடுக்க அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தற்போதைய நிலவரப்படி, மாவட்டத்தில் மாநகராட்சி மண்டலங்கள் உள்பட 15 பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு தன்னார்வலருக்கு 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படு கின்றனர்.இவர்களையும் கண்காணிக்க அந்தந்த பகுதி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி, மதுரை மாவட்டத்தில் நேற்று வரை மாநகராட்சி பகுதிகள் தவிர்த்து 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புகளுக்கு 1,192 மையங்களும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 504 மையங்களும் என 1,696 மையங்கள் செயல்படுகின்றன.
2-வது இடம்
மாநிலத்தில் மதுரை தான் அதிக மையங்களை கொண்டு 2-ம் இடம் பிடித்துள்ளது. அதேபோல, தன்னார்வலர்களை தேர்வு செய்வதில் மாநிலத்தில் முதலிடத்தில் உள்ளது. இந்த திட்டத்தின் மாவட்ட ஒருங் கிணைப்பாளர்களாக செந்தில் வேல்குமரன், சதீஷ்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டு, அனைத்து பணிகளையும் மேற்பார்வை செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்