ஊழல் தடுப்பு படை போலீசாரின் சோதனையில் சிக்கிய பெங்களூரு மாநகராட்சி அதிகாரி பணி இடைநீக்கம்

ஊழல் தடுப்பு படை போலீசாரின் சோதனையில் சிக்கிய பெங்களூரு மாநகராட்சி அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். வருமானத்திற்கு அதிகமாக ரூ.3½ கோடி சொத்து சேர்த்திருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.;

Update: 2021-12-09 22:04 GMT
பெங்களூரு:

ஊழல் தடுப்பு படை சோதனை

  பெங்களூரு மாநகராட்சியில் அதிகாரியாக பணியாற்றி வருபவர் மாயண்ணா. இவர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக ஊழல் தடுப்பு படை போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தது. இதையடுத்து, கடந்த மாதம் (நவம்பர்) 24-ந் தேதி மாயண்ணா உள்பட 15 அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் ஊழல் தடுப்பு படை போலீசார் சோதனை நடத்தி இருந்தனர்.

  பெங்களூருவில் உள்ள மாயண்ணாவுக்கு சொந்தமான வீடு, அவரது உறவினர் வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தி இருந்தார்கள். அப்போது அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தெரியவந்தது. அவருக்கு சொந்தமாக ஏராளமான வீடுகள், வீட்டுமனைகள் இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக அதிகாரி மாயண்ணா மீது பெங்களூரு ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகாரி பணி இடைநீக்கம்

  இந்த நிலையில், அதிகாரி மாயண்ணாவுக்கு ஒட்டு மொத்தமாக ரூ.5 கோடியே 71 லட்சத்திற்கு சொத்துகள் இருப்பது தெரியவந்தது. அவர் பணியில் சேர்ந்ததில் இருந்து, அவரது சொத்தின் மதிப்பு ரூ.2.20 கோடி மட்டுமே என்று ஊழல் தடுப்பு படை போலீசார் கண்டுபிடித்திருந்தனர். ஆனால் அவர் தனது வருமானத்தை காட்டிலும் ரூ.3 கோடியே 51 லட்சம் சொத்துகளை சட்டவிரோதமாக சேர்த்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பான தகவல்கள், ஆவணங்களை பெங்களூரு மாநகராட்சிக்கு ஊழல் தடுப்பு படை போலீசார் அனுப்பி வைத்திருந்தனர்.

  அதே நேரத்தில் மாநகராட்சி உயர் அதிகாரிகள் விசாரணையின் போதும் மாயண்ணா வருமானத்திற்கு அதிகமாக சட்டவிரோதமாக சொத்து சேர்த்திருப்பதும் தெரிந்தது. இதையடுத்து, அதிகாரி மாயண்ணா பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதிகாரி மாயண்ணா, அதே பணியில் தொடர்ந்தால் சாட்சி, ஆதாரங்களை அழிக்க வாய்ப்புள்ளதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சிக்கு, ஊழல் தடுப்பு படை போலீசார் கடிதம் எழுதி இருந்தனர். இதையடுத்து, மாயண்ணா பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்