மதுரை,
மதுரை புதூர் சூர்யாநகரை அடுத்த குடிநீர் வடிகால் வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மாரிதாஸ். இவர் சமூக வலைதளங்களில் தனது கருத்துக்களை பதிவிடுவது வழக்கம்.
இந்த நிலையில் மாரிதாஸ், தனது டுவிட்டர் பக்கத்தில் தி.மு.க. ஆட்சி குறித்தும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும் சர்ச்சை கருத்தை பதிவிட்டிருந்ததாக டி.வி.எஸ். நகரை சேர்ந்த வக்கீல் ராமசுப்பிரமணின், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு புகார் அளித்தார். அதன் பேரில் நடவடிக்கை எடுக்க புதூர் போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் மாரிதாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதை தொடர்ந்து மாரிதாஸ் வீட்டிற்கு சென்று அவரிடம் வழக்கு குறித்த விவரங்களை தெரிவித்து கைது செய்வதாக தெரிவித்தனர். பின்னர் அவரை கைது செய்து, புதூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையில் மாரிதாஸ் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வீடு மற்றும் போலீஸ் நிலையம் முன்பு பா.ஜ.க.வினர் திரண்டு போலீசாருக்கு எதிராக கோஷம் எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.