மாணவர்களை ஏற்றாமல் சென்ற அரசு டவுன் பஸ் சிறைபிடிப்பு

மாணவர்களை ஏற்றாமல் சென்ற அரசு டவுன் பஸ் சிறைபிடிக்கப்பட்டது.

Update: 2021-12-09 19:36 GMT
குன்னம்:

அதிக பயணிகள் கூட்டம்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ஆண்டி குரும்பலூர் கிராமத்தில் இருந்து வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சுமார் 25 மாணவ, மாணவிகள் சென்று படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பெரம்பலூர், குன்னம், ஆண்டி குரும்பலூர், பரவாய் கிராமம் வழியாக வேப்பூருக்கு டவுன் பஸ் ஒன்று சென்றது. ஆண்டி குரும்பலூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது அந்த பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால், அங்கு நின்ற பள்ளி மாணவர்களை ஏற்றாமல் பஸ் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் பள்ளி மாணவர்கள் சத்தம் போட்டு பஸ்சை நிறுத்தினர். உடனடியாக பள்ளி மாணவர்கள் அந்த பஸ்சை சிறை பிடித்தனர். இதையடுத்து ஊரில் உள்ள கிராம முக்கியஸ்தர்கள், டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நடந்தே சென்றனர்
அப்போது, பஸ்சில் இடம் இல்லாதநிலையில் மாணவர்களை ஏற்றிச் செல்லும்போது, அவர்கள் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு செல்லும் நிலை வரலாம். இதனால் விபத்து ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. எனவே கூடுதல் பஸ்சை இயக்க பெரம்பலூர் கிளை அரசு போக்குவரத்து கழக மேலாளரிடம் உங்கள் கோரிக்கைகளை மனுவாக கொடுங்கள், என்று கூறினர். இதையடுத்து மாணவர்கள் பஸ்சை விடுவித்தனர். இதையடுத்து அந்த பஸ் அங்கிருந்து புறப்பட்டு வேப்பருக்கு சென்றது. மேலும் 7 கிலோ மீட்டர் தூரம் உள்ள வேப்பூர் பள்ளிக்கு நடந்தும், இருசக்கர வாகனங்களில் ‘லிப்ட்’ கேட்டும் மாணவர்கள் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்