ஓட்டப்பிடாரம் தி.மு.க. எம்.எல்.ஏ. மீதான வழக்கு ரத்து
ஓட்டப்பிடாரம் தி.மு.க. எம்.எல்.ஏ. மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டு உள்ளது.
மதுரை,
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தி.மு.க. எம்.எல்.ஏ. சண்முகையா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 14.6.2015 அன்று உரிய அனுமதியின்றி பிளக்ஸ் வைத்ததாக தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் இறுதி அறிக்கையை தூத்துக்குடி மாவட்டம் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி இளங்கோவன் விசாரித்தார்.
முடிவில், பிளக்ஸ் மற்றும் போஸ்டரில் ஆட்சேபத்திற்குரிய கருத்து எதுவும் இல்லை. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைத்ததாக கூறியுள்ளனர். தனியார் திருமண மண்டபத்தில் பிளக்ஸ் வைக்கப்பட்டது. இதற்காக அனுமதி பெறப்பட்டதா, இல்லையா என்பது குறித்து மண்டபத்தின் உரிமையாளரிடம் விசாரிக்கவில்லை. வாக்குமூலம் பதிவு செய்யவில்லை. எனவே, இந்த வழக்கில் தூத்துக்குடி கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கை மற்றும் இந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டார்.