கரூரில் ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று கடையடைப்பு
ஜி.எஸ்.டி. உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கரூரில் ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) கடைகளை அடைக்க உள்ளனர்.
கரூர்,
கலந்தாய்வு கூட்டம்
கரூர் வீவிங் மற்றும் நிட்டிங் பேக்டரி உரிமையாளர்கள் சங்க தலைவர் தனபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஜவுளி தொழில் மீது 1-1-2022 முதல் விதிக்கப்பட்ட 12 சதவீத ஜி.எஸ்.டி. சம்பந்தமாக தமிழ்நாடு அனைத்து விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஈரோட்டில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஈரோடு, சென்னிமலை, கரூர், நாமக்கல், எடப்பாடி, பல்லடம், சோமனூர், திருப்பூர், வெண்ணந்தூர், அருப்புக்கோட்டை, ராஜபாளையம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து பல்வேறு சங்க நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு விசைத்தறியாளர் சங்க தலைவர் மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஜவுளி தொழில் பாதிப்பு
இதில் ஜவுளி ரகங்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள 5 சதவீத ஜி.எஸ்.டி.யிலிருந்து 12 சதவீதமாக உயர்த்தும் பட்சத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன. சாதாரண ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் ஜவுளி துணியானது அதிகளவில் தமிழ்நாட்டில் சாதாரண விசைத்தறியில் தயாரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் தயாராகிறது.
ஜனவரி 1-ந் தேதி முதல் 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்படும் ஜி.எஸ்.டி.யால் ஜவுளி தொழில் மிகக்கடுமையாக பாதிக்கப்படும்.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒருநாள் அடையாள கடையடைப்பு மற்றும் உற்பத்தி நிறுத்தம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
கடைகள் அடைப்பு
அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) கரூர் வீவிங் நிட்டிங் பேக்டரி ஓனர்ஸ் அசோசியேசன் சார்பில் அதன் உறுப்பினர்கள் சுமார் 200 கடை உரிமையாளர்கள் கடைகளை அடைத்து உற்பத்தி நிறுத்தம் செய்ய உள்ளார்கள். மேலும் அதன் தொடர்ச்சியாக கூட்டமைப்பின் சங்க பிரதிநிதிகள் மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகளையும், அமைச்சர்களையும் நேரில் சந்தித்து ஜவுளித் தொழிலில் உள்ள பாதிப்புகளை எடுத்துரைப்பது என முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதற்கு ஆதரவு தெரிவித்து டெக்ஸ்டைல் ஸ்டாக் கிளாத் அசோசியேஷன் சார்பில் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.