ஒடுகத்தூர் அருகே சாலை வசதி இல்லாத மலை கிராமங்கள்

ஒடுகத்தூர் அருகே மலை கிராமங்களுக்கு சாலை வசதி இல்லாததால் பள்ளி மாணவர்கள் அனைவரையும் ஆசிரியர் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று வருகிறார்.

Update: 2021-12-09 17:59 GMT
அணைக்கட்டு
 
ஒடுகத்தூர் அருகே மலை கிராமங்களுக்கு சாலை வசதி இல்லாததால் பள்ளி மாணவர்கள் அனைவரையும் ஆசிரியர் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று வருகிறார்.

மலை கிராமங்கள்

அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூரை அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட குடிகம், புளியமரத்தூர், தேந்தூர் உள்ளிட்ட 46 மலைக்கிராமங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப்பகுதிகளில் வாழும் கிராம மக்களுக்கு சாலை வசதி இல்லாததால் குண்டும் குழியுமான பாதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி மலையிலிருந்து கீழே வருகின்றனர். 

இந்த நிலையில் அந்தப் பகுதிகளில் படிக்கும் மாணவர்கள், குறித்த நேரத்துக்கு பள்ளிக்கு செல்ல முடியாததால் அதே பகுதியில் வசிக்கும் ஆசிரியர் வேலு என்பவர் சுமார் 80 மாணவர்களை தனது இரண்டு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று அதாவது இரண்டு பேராக சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக 80 பேரை அழைத்துச் சென்றுபள்ளியில் சேர்கின்றார். மாலையில் மீண்டும் அவரே 80 மாணவ- மாணவிகளையும் அவரவர் வீட்டில் விடுகின்றார். இந்த சம்பவம் தொடர்ந்து 5 ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக அவர் கூறினார். 

சாலை வசதி வேண்டும்

இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டதற்கு அரசிடம் இருந்து நாங்கள் எந்த சலுகையும் எதிர்பார்க்க வில்லை. நாங்கள் நடந்து செல்லவும், மாணவர்கள் பள்ளிக்கு செல்லவும், கர்ப்பிணிகளை உடனடியாக கீழே உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கவும் சாலை வசதி அமைத்துத் தந்தால் போதும் என்று கூறினர். 

கடந்த 5 நாட்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டு ஒரு பெண்ணை கீழே உள்ள மருத்துவமனைக்கு டிராக்டரில் கொண்டு வரும் போது பாதி வழியில் குழந்தை இறந்து பிறந்தது. முறையான சாலை வசதி இருந்தால் குழந்தையை காப்பாற்றி இருக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்