உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு கண்ணீர் மல்க விடைகொடுத்த மக்கள்
உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு கண்ணீர் மல்க விடைகொடுத்த மக்கள்
கோவை
உயரிழந்த வீரர்களுக்கு கண்ணீர் மல்க பொதுமக்கள் விடைகொடுத்ததுடன், வழியெங்கும் மலர் தூவிர அஞ்சலி செலுத்தினார்கள்.
ஹெலிகாப்டர் விபத்து
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
அவர்களின் உடல்கள் குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்துக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து 13 பேர்களின் உடல்களும் தனித்தனியாக தமிழக அரசின் இலவச அமரர் ஊர்தியில் ஏற்றப்பட்டன.
கண்ணீர் மல்க அஞ்சலி
பின்னர் பிற்பகல் 12.30 மணியளவில் குன்னூரில் இருந்து சூலூர் விமானப் படை தளத்தை நோக்கி அமரர் ஊர்தி வாகனங்கள் புறப்பட்டன. அப்போது ஆம்புலன்ஸ் வாகனங்கள் குன்னூரில் இருந்து காட்டேரி, மேட்டுப்பாளையம், அன்னூர், கருமத்தம் பட்டி, சோமனூர் வழியாக காரணம்பேட்டை வந்து திருச்சி சாலை சந்திப்பை அடைந்து சூலூர் விமானப்படைத் தளத்துக்கு 13 பேரின் உடல்களை சுமந்தவாறு ஆம்புலன்ஸ் வாகனம் வந்தடைந்தது.
அந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரும் வழிநெடுகிலும் பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மீது மலர்களை தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் மதியம் 2.50 மணியளவில் சூலூர் விமானப்படை தளத்துக்கு வந்து சேர்ந்தன. தொடர்ந்து சூலூர் விமானப்படை தளத்தின் நுழைவு வாயில் வழியாக அமரர் ஊர்தி வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து சென்றன.
தொடர்ந்து சூலூர் விமானப்படைத்தளத்தில் தயாராக நின்ற ராணுவத்துக்கு சொந்தமான சிறப்பு விமானத்தில் உடல்கள் ஏற்றப்படடு டெல்லி கொண்டு செல்லப்பட்டன.
பலத்த பாதுகாப்பு
முன்னதாக சூலூர் விமானப்படை தளத்துக்கு விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்திரி, கோவை மாவட்ட கலெக்டர் சமீரன், போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உள்ளிட்டோர் வந்து இருந்தனர். பொது மக்கள் அதிகளவு திரண்டதால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க சூலூர் விமானப்படை தளத்தின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.