தொண்டி புதுக்குடி கிராமத்திற்குள் கடல் நீர் புகுந்தது; மீனவர்கள் அவதி
கடல் சீற்றம் எதிரொலியாக தொண்டி புதுக்குடி கிராமத்திற்குள் கடல்நீர் புகுந்தது. இதனால் மீனவர்கள் கடும் அவதி அடைந்தனர். கிராமத்திற்குள் தடுப்பு சுவர் கட்டி தர வேண்டும் என அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தொண்டி,
கடல் சீற்றம் எதிரொலியாக தொண்டி புதுக்குடி கிராமத்திற்குள் கடல்நீர் புகுந்தது. இதனால் மீனவர்கள் கடும் அவதி அடைந்தனர். கிராமத்திற்குள் தடுப்பு சுவர் கட்டி தர வேண்டும் என அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கடல் சீற்றம்
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
அதிகாலை 3 மணியளவில் கடலில் சீற்றம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. பயங்கர சத்தம் கேட்டு எழுந்து பார்த்த போது கடலில் ஒரு மாற்றம் தெரிந்தது. உடனே வீட்டில் தூங்கி கொண்டிருந்த குழந்தைகளை எழுப்பி கொண்டும் உடைமைகளை எடுத்துக் கொண்டும் பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்று விட்டோம். நேரம் ஆக, ஆக கடல்நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விட்டது.
படகுகள் சேதம்
பின்னர் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை அகற்றினோம். புயல், மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருக்கும். ஆனால் இப்படி குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததை இப்போது தான் பார்த்துள்ளோம். கடல் நீர் குடியிருப்புக்குள் புகுந்ததால் மீனவர்களாகிய நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளோம்.
எனவே தொண்டி மற்றும் புதுக்குடி கடற்கரை பகுதியில் கடல் நீர் ஊருக்குள் வருவதை தடுக்கும் வகையிலும் கடற்கரையை ஒட்டிய பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையிலும் தமிழக அரசு தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.