முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்களுக்கு மு க ஸ்டாலின் அஞ்சலி

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்களுக்கு மு க ஸ்டாலின் அஞ்சலி

Update: 2021-12-09 17:39 GMT
குன்னூர்

வெலிங்டன் ராணுவ முகாமில் வைக்கப்பட்டிருந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

ராணுவ மருத்துவமனை

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள நஞ்சப்பசத்திரம் அருகே நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்படர் விபத்தில் சிக்கி கீழே விழுந்து தீப்பிடித்தது. இந்த கோர விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் பிரிகேடியர் லிட்டர், கர்னல் ஹிர்ஜிந்தர் சிங், குர்சேவக் சிங், ஜிதேந்திரகுமார், விவேக் குமார், சாய் தேஜா, சத்பால், தாஸ், விங் கமாண்டர் சவுகான், குரூப் கேப்டன் குல்தீப், பிரதீப் ஆகிய 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியது.

விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று அதிகாலை முதல் அந்த மருத்துவமனைக்கு ராணுவ உயர் அதிகாரிகள் வந்தனர். மேலும் பாதுகாப்பிற்காக ராணுவ மருத்துவமனை முன்பு துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். 

அலங்கரிக்கப்பட்ட டிரக்குகள் 

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட இறந்த 13 பேரின் உடல்கள் பெட்டியில் வைக்கப்பட்டு, அதன் மீது தேசிய கொடி போர்த்தப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட ராணுவ டிரக்குகளில் ஏற்றப்பட்டன. இதையடுத்து இந்த ராணுவ டிரக்குகள், மருத்துவமனையில் காலை 10.30 மணிக்கு புறப்பட்டு எம்.ஆர்.சி. ராணுவ முகாமிற்கு வந்தது.

வீரர்களின் உடல்களை சுமந்து வந்த ராணுவ டிரக்குகளுக்கு முன் ராணுவ இசைக்குழு இசைத்தபடி வந்தனர். தொடர்ந்து முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி ஆகியோரது உடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக இறக்கப்பட்டது. தொடர்ந்து 3 டிரக்குகளில் இருந்தும் 13 பேரின் உடல்கள் இறக்கப்பட்டு, எம்.ஆர்.சி. முகாமில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டு இருந்தது. 

அஞ்சலி செலுத்தினர் 

இதில் முதல் வரிசையில் பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 4 பேரின் உடல்களும், அடுத்த வரிசைகளில் 9 பேரின் உடல்களும் வைக்கப்பட்டு இருந்தன. முதலில் ராணுவ உயர் அதிகாரிகள் 13 பேரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, சாமிநாதன், கா.ராமச்சந்திரன், தலைமை செயலாளர் இறையன்பு, மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசீஸ் ராவத் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். 

பின்னர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியை சேர்ந்த வெளிநாட்டு ராணுவ அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

முதல்-அமைச்சர் அஞ்சலி

இறுதியாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 11.25 மணிக்கு எம்.ஆர்.சி. ராணுவ மையத்திற்கு வந்தார். முதலில் அவர், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து அங்கு நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார். 

இதையடுத்து மு.க.ஸ்டாலின், அங்கிருந்த பிற ராணுவ வீரர்களின் உடலுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர், முன்னாள் ராணுவ அதிகாரிகளை சந்தித்து சிறிது நேரம் பேசினார். 

அப்போது தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு, உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். தொடர்ந்து 11.35 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ராணுவ மையத்தில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றார்.

தெலுங்கானா கவர்னர்

இதையடுத்து தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், உயிரிழந்த வீரர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்து, கிறிஸ்துவம், முஸ்லிம், சீக்கியம் ஆகிய 4 மதத்தலைவர்கள் தங்களது மத நம்பிக்கைகளின் படி ராணுவ வீரர்களின் உடல்களுக்கு சடங்குகள் செய்து அஞ்சலி செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேரின் உடல்களை ஏற்றி செல்ல தமிழக அரசின் இலவச அமரர் ஊர்தி வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ராணுவ மையத்திற்கு வந்தன. ஒரு வாகனத்திற்கு ஒரு வீரரின் உடல் என 13 வாகனங்களில் உடல்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஏற்றப்பட்டது.

பாதுகாப்பு 

இந்த அமரர் ஊர்தி வாகனங்கள் மதியம் 12.30 மணிக்கு எம்.ஆர்.சி. ராணுவ மையத்தில் இருந்து புறப்பட்டது. அமரர் ஊர்தி வாகனங்களுக்கு முன் போலீஸ் பைலட் வாகனமும், அதனைத்தொடர்ந்து ராணுவ பாதுகாப்பு வாகனம் சென்றது. 

இதேபோல் கடைசியில் ராணுவ பாதுகாப்பு வாகனமும் வந்தது. இந்த வாகனங்களில் பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் இருந்தனர்.

 அஞ்சலி செலுத்தியபோது பெய்த மழை

குன்னூர் பகுதியில் நேற்று காலை வானம் தெளிவாக காணப்பட்டது. முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேரின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி எம்.ஆர்.சி. ராணுவ மையத்தில் நடைபெற்றது. 

அப்போது முதல்-அமைச்சர் அஞ்சலி செலுத்தியபோது திடீரென்று மேக கூட்டம் சூழ்ந்து சில நிமிடங்கள் மழை பெய்தது. இந்த மழையில் முதல்-அமைச்சர் நனைந்தபடி ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் சில நிமிடங்களில் மழை நின்று வானம் தெளிவானது.

மேலும் செய்திகள்