குடும்ப பிரச்சினை காரணமாக தீக்குளித்து பெண் தற்கொலை கோட்டாட்சியர் விசாரணை
பொன்னமராவதியில் குடும்ப பிரச்சினை காரணமாக பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
பொன்னமராவதி:
பிரச்சினை
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் உள்ள அரிமா மாநகரை சேர்ந்தவர் ஹரிஹரசுதன். இவரது மனைவி லாவண்யா (வயது 30). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதில் மனமுடைந்த லாவண்யா சமையலறையில் வைத்திருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதையடுத்து அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை.
பெண் சாவு
இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாவண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். லாவண்யாவுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி விசாரணை நடத்தி வருகிறார்.