குமரி ராணுவ வீரர் மரணம்
காஷ்மீரில் பணிபுரிந்த குமரி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் மரணம் அடைந்தார். இதனால் அவரது சொந்த கிராமம் சோகத்தில் மூழ்கியது.
குலசேகரம்,
காஷ்மீரில் பணிபுரிந்த குமரி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் மரணம் அடைந்தார். இதனால் அவரது சொந்த கிராமம் சோகத்தில் மூழ்கியது.
ராணுவ வீரர்
குமரி மாவட்டம் குலசேகரத்தை அடுத்த அண்டூர் புல்லை சாஸ்தான் கோவில் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணபிரசாத் (வயது 38). இவர் கடந்த 15 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார்.
கடந்த சில வருடங்களாக காஷ்மீரில் எல்லை பகுதியில் பணியாற்றினார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் கிருஷ்ணபிரசாத் அங்குள்ள பதுங்கு குழி பகுதியில் சீரமைப்பு பணியில் ஈடுபட்ட போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை ராணுவ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.
சோகத்தில் மூழ்கிய கிராமம்
இதுகுறித்த தகவல் கிருஷ்ணபிரசாத் குடும்பத்தினருக்கு ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவரது கிராமமே சோகத்தில் மூழ்கியது.
மரணம் அடைந்த ராணுவ வீரர் கிருஷ்ண பிரசாத்துக்கு சவுமியா (38) என்ற மனைவியும், 7 வயதில் மகனும், 5 வயதில் மகளும் உள்ளனர். மேலும் கிருஷ்ணபிரசாத்தின் குடும்பம் ராணுவ வீரர் குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் கிருஷ்ண பிரசாத்தின் உடல் காஷ்மீரில் இருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு ராணுவ மரியாதையுடன் இறுதி சடங்கு சொந்த ஊரில் நடைபெறுகிறது.