நகைக்காக தாய்-மகளை கொடூரமாக கொன்று உடல்களை எரித்த இலங்கை அகதி சிக்கினார்

வீட்டுக்குள் உடல்கருகி பிணமாக கிடந்த தாய், மகள் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர்களை நகைக்காக கொடூரமாக தாக்கி ்கொன்ற இலங்கை அகதி போலீசாரிடம் சிக்கினார்.;

Update: 2021-12-09 17:06 GMT
பனைக்குளம்,

வீட்டுக்குள் உடல்கருகி பிணமாக கிடந்த தாய், மகள் சம்பவத்தில்  திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர்களை நகைக்காக கொடூரமாக தாக்கி ்கொன்ற இலங்கை அகதி போலீசாரிடம் சிக்கினார்.

தாய்-மகள் உடல்கள்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரெயில்வே மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் காளியம்மாள் (வயது 58). இவர் தனது 2-வது மகள் மணிமேகலையுடன்(34) மருத்துவமனையின் அருகே உள்ள ரெயில்வே காலனியில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி காலையில் தாயும், மகளும் உடல் கருகிய நிலையில் வீட்டுக்குள் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
 இது குறித்து துப்புதுலக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
காளியம்மாள் மண்டபம் முகாம் எதிரே சொந்தமாக வீடு கட்டி வந்துள்ளார். அங்கு மண்டபம் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சசிகுமார் (35) என்பவரும் வேலை செய்தார். 20 நாட்களுக்கு முன்பு அவர் காளியம்மாள் வசித்து வரும் ரெயில்வே காலனியில் உள்ள வீட்டிலும் சில வேலைகள் செய்து கொடுத்துள்ளார். அப்போது வீட்டில் காளியம்மாளும், அவருடைய மகளும் மட்டும்தான் வசித்து வருவதை நோட்டமிட்டு அறிந்துள்ளார். எனவே அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

கொடூரக்கொலை

விசாரணையில், கடந்த 6-ந்தேதியன்று இரவு அந்த வீட்டின் பின்பக்கம் வழியாக புகுந்து தூங்கிக்கொண்டிருந்த காளியம்மாள் மற்றும் அவரது மகளின் தலையில் இரும்பு கம்பி மற்றும் அரிவாளால் கொடூரமாக தாக்கி கொன்றுள்ளார். தொடர்ந்து இருவரும் கழுத்து மற்றும் காதில் அணிந்திருந்த தங்கச்சங்கிலி, கம்மல், வளையல் உள்ளிட்ட நகைகளை கொள்ளையடித்தார்.
தாய்-மகள் இருவரையும் தீ வைத்து எரிக்க திட்டமிட்டு வீட்டின் பீரோவில் இருந்த பட்டுச்சேலை உள்ளிட்ட துணிகளையும் இருவரின் உடல் மீதும் போர்த்தி தீவைத்து எரித்துள்ளார். அதன் பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடியது தெரியவந்துள்ளது.

நகைகள் மீட்பு

இதையடுத்து, சசிகுமார் வசித்துவந்த மண்டபம் ஏ.கே.எஸ்.தோப்பில் உள்ள வீட்டில் இருந்து காளியம்மாளின் நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதில் சில நகைகள் கவரிங் நகைகள் என்பதும் தெரியவந்தன.
இந்த இரட்டைக்கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா அல்லது சசிகுமார் மட்டும் தனியாக இந்த பயங்கர செயலில் ஈடுபட்டாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று தென் மண்டல போலீஸ் ஐ.ஜி அன்பு, ராமநாதபுரம் சூப்பிரண்டு கார்த்திக் ஆகியோர் மண்டபம் வந்தனர். அவர்கள் ரெயில்வே காலனியில் சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டு, அந்த பகுதியில் உள்ள மக்களிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்