ஆம்பூர் அருகே பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட 5 குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அனுமதி

ஆம்பூர் அருகே பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட அங்கன்வாடி மைய குழந்தைகள் 5 பேருக்கு மயக்கம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2021-12-09 17:03 GMT
ஆம்பூர்

ஆம்பூர் அருகே பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட அங்கன்வாடி மைய குழந்தைகள் 5 பேருக்கு மயக்கம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பல்லி விழுந்த உணவு

ஆம்பூரை அடுத்த நரியம்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று 22 குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு வந்துள்ளனர். அங்கன்வாடி மையத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் சுஜி மற்றும் சமையலர் நந்தினி பணியில் இருந்துள்ளனர். 17 குழந்தைகள் மதிய உணவிற்கு வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் 5 குழந்தைகளின் பெற்றோர்கள் அங்கன்வாடி மையத்திற்கு வந்து உணவை வாங்கி குழந்தைகளுக்கு ஊட்டி உள்ளனர். 

அப்போது உணவில் பல்லி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து அங்கன்வாடி மையத்தில் ஆசிரியர்கள் மற்றும் சமையலரிடம் தகவல் தெரிவித்தனர். அப்போது திடீரென சில குழந்தைகளுக்கு மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக பெற்றோர்கள் அனைவரும் தங்களது குழந்தைகளை அழைத்து சென்று ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

கலெக்டர் ஆய்வு

இச்சம்பவம் குறித்து தகவலறிந்ததும் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் குஷ்வாஹா, எம்.எல்.ஏ.க்கள் ஆம்பூர் வில்வநாதன், குடியாத்தம் அமலு விஜயன், மாவட்ட திட்ட இயக்குனர் செல்வராசு, நரியம்பட்டு ஊராட்சி மன்றத்தலைவர் பாரதிஸ்ரீ ஆகியோர் நரியம்பட்டு அங்கன்வாடி மையத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். 
பின்னர் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்று குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தனர். இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில் அனுமதிக்கப்பட்டுள்ள 5 குழந்தைகளும் எந்த ஒரு பாதிப்புமின்றி நலமாக உள்ளதாகவும் அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு 24 மணி நேரம் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவித்தனர். 

இதேபோல் கடந்த நவம்பர் மாதம் ஆம்பூர் அடுத்த சோமலாபுரம்  அங்கன்வாடி மையத்தில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்டு 17 குழந்தைகள் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது கூறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்