தனித்தனி விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி
தனித்தனி விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் பலியாகினர்.;
மூங்கில்துறைப்பட்டு,
தொழிலாளி
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மைக்கேல்புரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் சின்னதுரை (வயது 31), கூலி தொழிலாளியான இவர் நேற்று மாலை வடபொன்பரப்பியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். வடகீரனூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, முன்னாள் சென்ற டிராக்டர் மீது சின்னதுரை ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சின்னதுரை டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாாின்பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
விழுப்புரம் அருகே கண்டமானடி கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள். கூலி தொழிலாளியான இவர் நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த கிருபாகரன் என்பவரது நிலத்தின் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மழை பெய்ததால் நின்றுகொண்டிருந்த லாரியின் கீழ் மழைக்கு ஒதுங்கி உள்ளார். இதை பார்க்காத டிரைவர், லாரியை இயக்கினார். இதில் லாரி சக்கரத்தில் சிக்கியதில் கலியபெருமாள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.