தர்மபுரி சந்தைப்பேட்டை பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள்
தர்மபுரி சந்தைப்பேட்டை பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள்
தர்மபுரி, டிச.10-
தர்மபுரி சந்தைப்பேட்டை பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன. அப்போது போராட்டம் நடத்த முயன்றவர்களால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போக்குவரத்து நெரிசல்
தர்மபுரி சந்தைப்பேட்டை பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. நகராட்சிக்கு சொந்தமான கடைகளும் இந்த பகுதியில்செயல்பட்டு வருகின்றன. பல்வேறு பொருட்களை வாங்க இப்பகுதிக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.
இங்கு சாலையோரத்தில் பழக்கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் செயல்பட்டு வந்தன. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இத்தகைய நேரங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது வாடிக்கையானது.
ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
இந்த நிலையில் முறையான அனுமதியின்றி சாலையோர பகுதிகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற கலெக்டர் திவ்யதர்சினி நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சந்தைப்பேட்டை பகுதியில் வைக்கப்பட்டுள்ள சாலையோர கடைகளை அகற்றி கொள்ளுமாறு நகராட்சி நிர்வாகத்தின் மூலம் கடந்த சில நாட்களாக அறிவிப்பு செய்யப்பட்டது. இருந்தபோதிலும் பலர் சாலையோர கடைகளை அகற்றவில்லை.
இந்த நிலையில் நேற்று தர்மபுரி நகராட்சி ஆணையர் சித்ரா சுகுமார் தலைமையில் நகரமைப்பு ஆய்வாளர் ஜெயவர்மன், நகர பொறியாளர் ஜெயசீலன் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினர் சந்தைப்பேட்டை பகுதிக்கு பொக்லைன் வாகனங்களுடன் சென்றனர். அங்கு சாலையோர பகுதிகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த கடைகளை பொக்லைன் எந்திரம் உதவியுடன் அகற்றினர்.
போலீசார் எச்சரிக்கை
அப்போது சாலையோர கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் எச்சரிக்கை செய்தனர். இதைத்தொடர்ந்து சந்தைப்பேட்டை பகுதியில் சாலையோர பகுதியை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 80- க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் அகற்றப்பட்டன.
இதேபோல் உரிய அனுமதி பெற்ற கடைகளின் முன் பகுதியில் ஆக்கிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் போடப்பட்டிருந்த மேற்கூரைகள், ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள் அகற்றப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன.இந்த நடவடிக்கையால் அந்த பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.