வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை அகற்றாததை கண்டித்து கடம்பத்தூர்-பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்

திருவள்ளூர் அருகே வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை அகற்றாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;

Update:2021-12-09 20:03 IST
சாலை மறியல்

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் முதல்நிலை ஊராட்சிக்கு உட்பட்டது வைஷாலி நகர். இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் வைஷாலி நகர் பகுதியில் மழைநீர் புகுந்தது.

இந்த மழைநீர் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் சூழ்ந்து குளம்போல் காணப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 10 நாட்களுக்கும் மேலாக மழைநீர் வெளியேறாததால் அவதிப்பட்டு வந்தனர்.

மேலும் மழை வெள்ளத்தில் பாம்பு, தேள், பூரான் போன்ற விஷ பூச்சிகளும் வீடுகளுக்குள் நுழைந்ததால் அவதியுற்று வருகிறார்கள். மழைநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி இருப்பதால் தொற்று நோய் பரவும் அபாய நிலையும் உள்ளது.

மழைநீரை வெளியேற்ற அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை கடம்பத்தூர்-பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதன் காரணமாக அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதுபற்றி தகவல் அறிந்த தும் திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார், கடம்பத்தூர் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி ரமேஷ், கிராம நிர்வாக அலுவலர்கள் ரமேஷ், பரணிதரன், கடம்பத்தூர் இன்ஸ்பெக்டர்கள் நாகலிங்கம், பாபு, சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் மழைநீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். பின்னர் திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார் பொக்லைன் எந்திரம் மூலம் வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை கால்வாய் மூலம் அகற்ற நடவடிக்கை மேற்கொண்டார்.

அதைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதன் காரணமாக அந்த வழியாக சுமார் 1 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்