கோவை மாநகராட்சி வாக்காளர் பட்டியல் வெளியீடு

கோவை மாநகராட்சி வாக்காளர் பட்டியல் வெளியீடு

Update: 2021-12-09 14:09 GMT

கோவை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி கோவை மாநகராட்சி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.இதில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

 இதையொட்டி அரசியல் கட்சியினர் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்களை வாங்கி வருகின்றனர்.


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி கோவை மாநகராட்சியில், 2021-ம் ஆண்டுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டிய லை வெளியிடும் நிகழ்ச்சி கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

 வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டார். 

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 287 வாக்குச்சாவடி மையங்களில் 1,290 வாக்குச்சாவடிகளும், 7 லட்சத்து 68 ஆயிரத்து 736 ஆண்களும், 7 லட்சத்து 69 ஆயிரத்து 397 பெண்களும், 278 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தமாக 15 லட்சத்து 38 ஆயிரத்து 411 வாக்காளர்கள் உள்ளனர். 

இதில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். 

பொதுமக்கள் பார்வையிடலாம்

இந்த வாக்காளர் பட்டியல் மாநகராட்சி பிரதான அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளது.


இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா கூறுகையில்,

 நகர்புற உள்ளாட்சி தேர்தல் பணிக்கு 20 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 1548 கண்ட்ரோல் யூனிட் எந்திரங்கள், 3096 வாக்குப்பதிவு எந்திரங்கள் தேவைப்படும். 

வாக்குப்பதிவு எந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு கடந்த மாதம் 12-ந் தேதி நடைபெற்றது என்றார். 

அப்போது மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, செயலர் அமுல்ராஜ், உதவி ஆணையாளர் செந்தில்குமார் ரத்தினம்ஆகியோர் உடன் இருந்தனர்.

நகராட்சி, பேரூராட்சி

இதேபோல் கோவை மாவட்டத்தில் 7 நகராட்சிகள் உள்ளன. இங்கு 231 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. 

இதில், 96 ஆயிரத்து 980 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 108 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 43 பேர் என மொத்தம் 2 லட்சத்து 131 பேர் உள்ளனர். கோவை மாவட்டத்தில் 33 பேரூராட்சிகள் உள்ளன. 

இங்கு 632 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. இந்த பகுதிகளில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 25 ஆண்கள், 2 லட்சத்து 44 ஆயிரத்து 89 பெண்கள், 93 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 4 லட்சத்து 73 ஆயிரத்து 207 பேர் உள்ளனர்.

மேலும் செய்திகள்