கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் பஸ் நிலைய கட்டுமான பணிக்கு இடையூறாக இருந்த தேவாலயம் இடித்து அகற்றம்
கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் பஸ் நிலைய கட்டுமான பணிக்கு இடையூறாக இருந்த தேவாலயம் இடித்து அகற்றப்பட்டது.
மாதா கோவில்
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பஸ்நிலையம் கட்டும் பணி கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
தற்போது பஸ்நிலையம் கட்டுமான பணிகள் 50 சதவீதத்துக்கு மேல் நிறைவு பெற்றுள்ள நிலையில் புதிய பஸ் நிலையத்தின் நுழைவுவாயில் பகுதியில் பஸ் நிலையத்தில் முகப்பு கட்டுமான பணிகளுக்கு இடையூறாக ஒரு மாதா கோவில் (தேவாலயம்) இருந்தது.
இடித்து அகற்றம்
இந்தநிலையில் மிக விரைவாக கட்டுமான பணிகள் நடைபெறுவதற்காக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவுபடி நேற்று வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் வருவாய்த்துறையினர் பொக்லைன் எந்திரத்தின் மூலம் கட்டுமான பணிகளுக்கு இடையூறாக இருந்த மாதா கோவிலை இடிப்பதற்கு முன்பு அதிலுள்ள மாதா சிலையை பத்திரமாக பாதுகாப்புடன் அகற்றிய வருவாய்த்துறையினர் அதனை வண்டலூர் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
இதனையடுத்து மாதா கோவில் கட்டிடத்தை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். இதனையடுத்து புதிய புறநகர் பஸ் நிலையத்தில் நுழைவுவாயில் பகுதியில் முகப்பு அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர்
இதேபோல் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பென்னலூர் கிராமத்தில் சுடுகாடு இடத்தை ஆக்கிரமித்து தேவாலயம் கட்டப்பட்டுள்ளதாகவும் அரசுக்கு சொந்தமான சுடுகாடு இடத்தை மீட்க வேண்டுமென்றும் அதே பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் கடந்த 2013-ம் ஆண்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த மாதம் 24-ந்தேதி வெளியானது. தீர்ப்பில் 4 வாரங்களுக்குள் வருவாய்த்துறையினர் சுடுகாடு நிலத்திலுள்ள தேவாலயம் கட்டியுள்ள நிலத்தை மீட்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று காஞ்சீபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் வருவாய்த்துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்போடு 4 பொக்லைன் எந்திரங்களை கொண்டு தேவாலயத்தை இடித்து தரைமட்டமாக்கி சுடுகாடு நிலத்தை மீட்டனர்.