ரெயில்வே சுரங்க பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீர்

ரெயில்வே சுரங்க பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீர்;

Update: 2021-12-09 13:18 GMT
உடுமலை பெரியார் நகர் பகுதியில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 
ரெயில்வே சுரங்கப்பாதை
உடுமலை நகராட்சி பகுதியில் உள்ள பெரியார் நகர் பகுதியில் ரெயில்வே தண்டவாளத்திற்கு கீழ் சுரங்கப்பாதை உள்ளது. இந்த இடத்திற்கு தெற்கு பகுதியில் உள்ள பழனியாண்டவர் நகர், ஜீவாநகர், முனீர் நகர் உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்தி வந்தனர். அவர்கள் தங்களது வீடுகளில் இருந்து இந்த சுரங்கப்பாதை வழியாக தெற்கு பகுதிக்கு வந்து வாரச்சந்தை, மத்திய பஸ் நிலையம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளுக்கு வந்துசென்று கொண்டிருந்தனர்.
இந்த வழித்தடம் பிரதான சாலையான பழனிசாலைக்கு செல்வதற்கு குறைவான தூரமே உள்ளது. அதேபோன்று இந்த சுரங்கப்பாதைக்கு வடக்குப்பகுதியில் உள்ளவர்களும் இந்த வழித்தடத்தை பயன்படுத்தி வந்தனர். இந்த சுரங்கப்பாதையில் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும்.அந்த தண்ணீரை நகராட்சி நிர்வாகத்தினர் மோட்டார் வைத்து அப்புறப்படுத்துவர்.அப்படியிருந்தும் அடுத்தநாளே நீர் கசிவால் சிறிதளவாவது தண்ணீர் தேங்கி நிற்கும். அதில் இருசக்கர வாகன ஓட்டுனர்கள் சிரமப்பட்டு சென்று வந்து கொண்டிருந்தனர்.
தேங்கி நிற்கும் தண்ணீர்
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையினால்  ரெயில்வே சுரங்கப்பாதையில் 6அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.நீண்ட நாட்களாக தண்ணீர் தேங்கி நிறுபதால் கழிவுநீர் போன்று உள்ளது. அதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் அந்த சுரங்கப்பாதை வழியாக இருசக்கர வாகனத்தில் செல்ல முயன்றால், தண்ணீரில் சிக்கிக்கொள்வார்கள் என்பதால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள், அந்த சுரங்கப்பாதைக்கு முன்பு மரக்கிளைகளால் தடுப்புகளை அமைத்துள்ளனர்.
 அதனால் வாகனங்களில் வருகிறவர்கள் சிறிது துரம் சுற்றி உழவர் சந்தைக்கு அருகில் உள்ள ரெயில்வே கேட் வழியாக சென்று வருகின்றனர். அதேசமயம் அங்கு சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீரை மோட்டார் வைத்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்