நகராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா

நகராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா

Update: 2021-12-09 12:45 GMT
உடுமலை யு.கே.சி.நகரில் பாதாள சாக்கடை தொட்டியின் மூடி வழியாக வெளியேறி தேங்கி நின்றகழிவுநீரை அகற்றக்கோரி அந்த பகுதியைச்சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி அலுவலக நுழைவு வாயில் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர்.
பாதாள சாக்கடை
உடுமலை நகராட்சி பகுதியில் பாதாளசாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டத்தில் சாலைகளில் குழிகள் தோண்டி குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதில் ஆங்காங்கு ஆள்நுழை இறங்குகுழி தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. வீடுகளில் இருந்து குழாய் மூலம் இந்த தொட்டிகளுக்கு கொண்டு செல்லப்படும் கழிவுநீர் அங்கிருந்து பிரதான குழாய்மூலம் ஏரிப்பாளையத்தை அடுத்து குறிஞ்சேரி சாலையில் உள்ள நகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சென்றடையும்.
இந்த பாதாள சாக்கடை திட்டத்தில் ஆங்காங்கு உள்ள ஆள்நுழை இறங்குகுழி தொட்டிகளின் மூடிகள் பழுதடைந்தும், உடைந்தும் விடுகிறது. அதனால் மூடிகள் வழியாக கழிவுநீர் வெளியேறுவதும், நகராட்சி பணியாளர்கள் வந்து புதியமூடிகளை பொருத்தி சீரமைப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
தர்ணா
இந்த நிலையில் 14வது வார்டு யு.கே.சி.நகரில் பாதாள சாக்கடை ஆள்நுழை இறங்குகுழி தொட்டியின் மூடி பழுதடைந்து அதன் வழியாக கழிவுநீர் வெளியேறியது. இந்த கழிவுநீர் அந்த பகுதியில் 4 வீதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நின்றது. இதுகுறித்து அந்த பகுதியைச்சேர்ந்த பொதுமக்கள், அந்த கழிவு நீரை அப்புறப்படுத்தவேண்டும், கழிவுநீர் வெளியே வராதவகையில்பாதாள சாக்கடை தொட்டியின் மூடி பகுதியில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நகராட்சிக்கு கோரிக்கை விடுத்தனர்.ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அந்த பகுதியைச்சேர்ந்த பொதுமக்கள் நேற்று  நகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர்.அவர்கள் அலுவலக நுழைவு வாயில் முன்பு உட்கார்ந்து தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகராட்சி ஆணையாளர் பி.சத்தியநாதன், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் கோரிக்கை குறித்து கேட்டறிந்தார்.இதைத்தொடர்ந்து யு.கே.சி.நகருக்கு சென்று அந்த இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்த ஆணையாளர், அங்கு தேங்கியிருந்த கழிவுநீரை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டார்.இதைத்தொடர்ந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்