உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் வெளியீடு
உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் வெளியீடு
திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்து. 1 மாநகராட்சி, 5 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளில் மொத்தம் 10 லட்சத்து 98 ஆயிரத்து 857 வாக்காளர்கள் உள்ளனர்.
புகைப்படத்துடன் வாக்காளர் பட்டியல்
திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளதை தொடர்ந்து புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் கலெக்டர் வினீத், வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி உடனிருந்தார்.
மாவட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி, 5 நகராட்சிகள், 14 பேரூராட்சிகள் உள்ளன. இவைகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. நேற்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 3 லட்சத்து 62 ஆயிரத்து 353 ஆண்கள், 3 லட்சத்து 50 ஆயிரத்து 247 பெண்கள், 170 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 7 லட்சத்து 12 ஆயிரத்து 770 வாக்காளர்கள் உள்ளனர்.
10 லட்சத்து 98 ஆயிரத்து 857 பேர்
இதுபோல் 5 நகராட்சிகளில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 241 ஆண்கள், 1 லட்சத்து 12 ஆயிரத்து 591 பெண்கள், 20 மூன்றாம் பாலினத்தவர் என 2 லட்சத்து 17 ஆயிரத்து 852 வாக்காளர்கள் உள்ளனர். 14 பேரூராட்சிகளில் 81 ஆயிரத்து 917 ஆண்கள், 86 ஆயிரத்து 311 பெண்கள், 7 மூன்றாம் பாலித்தவர் என 1 லட்சத்து 68 ஆயிரத்து 235 வாக்காளர்கள் உள்ளனர்.
மாவட்டத்தில் 5 லட்சத்து 49 ஆயிரத்து 511 ஆண்கள், 5 லட்சத்து 49 ஆயிரத்து 149 பெண்கள், 197 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 10 லட்சத்து 98 ஆயிரத்து 857 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியல் நகல் மற்றும் அதற்கான சி.டி.க்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளிடம் அதிகாரிகள் வழங்கினார்கள். இதில் கட்சியினர் பங்கேற்றனர்.