இலங்கைக்கு கடத்த முயன்ற 750 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 750 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினர் நேற்று பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-12-09 12:06 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தில் பல்வேறு அரியவகை உயிரினங்கள் காணப்படுகின்றன. இந்த உயிரினங்கள் பாதுகாக்கப்பட்ட உயிரினமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடல் அட்டையை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், வெளிநாடுகளில் கடல் அட்டை மருந்துப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் கடல் அட்டைக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

கடல் அட்டை கடத்தல்
 
இதன் காரணமாக தூத்துக்குடியில் இருந்து இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அடிக்கடி கடல் அட்டை கடத்தப்பட்டு வருகிறது. இதனால் கடலோர பாதுகாப்பு போலீசார், வனத்துறையினர் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

நேற்று அதிகாலையில் தூத்துக்குடி மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனச்சரகர் ரகுவரன் தலைமையில், வனவர்கள் மதன்குமார், அருண்குமார், வனக்காப்பாளர்கள் மணிகண்டன், பாலாஜி மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கோமஸ்புரம் அருகே உள்ள ஒரு தனியார் கம்பெனியில் இருந்து கடல் அட்டையை அவிப்பது போன்ற துர்நாற்றம் வீசி உள்ளது. உடனடியாக வனத்துறையினர் அந்த கம்பெனிக்கு உள்ளே சென்று ஆய்வு செய்தனர். 

அப்போது, அங்கு கடல் அட்டைகளை வேக வைத்து பிளாஸ்டிக் கேன்களில் வைத்து இருந்தனர். அதேபோன்று பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளையும் சில மூட்டைகளில் கட்டி லோடு ஆட்டோவில் ஏற்றி வைத்து இருந்தனர். உடனடியாக வனத்துறையினர் அங்கிருந்த 750 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர். அவற்றின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

3 பேர் கைது

இதைத்தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள், கடல் அட்டைகளை பதுக்கி வைத்து இருந்ததாக ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை மேலவயலை சேர்ந்த செந்தில்குமார் (வயது 48), தொண்டியை சேர்ந்த சாதிக் பாட்ஷா (37), தூத்துக்குடி தாய்நகரை சேர்ந்த நந்தகுமார் (21) ஆகிய 3 பேரை கைது செய்தனர். 

அவர்களிடம் இருந்து மினி லோடு ஆட்டோ, கியாஸ் அடுப்புகள், சிலிண்டர்கள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், கடல் அட்டைகளை பதப்படுத்தி மண்டபம் கொண்டு சென்று, அங்கிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்து இருந்்தது தெரியவந்தது. தொடர்ந்து அதிகாரிகள், இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கைக்கு கடத்த முயன்ற 750 கிலோ கடல் அட்டைகள் பிடிபட்ட  சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்